வெள்ளி, மே 04, 2012

நரேந்திர மோடி நுழைய இங்கிலாந்திலும் தடை?

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மனித இனப் படுகொலைகள் புரிந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டதால் 2005 ஆண்டு முதல் அமெரிக்காவில் அவர் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இங்கிலாந்தும் நரேந்திர மோடிக்குத் தடை விதிக்கத் திட்டமிட்டுள்ளதாகச் செய்திகள் கூறுகின்றன. பிரிட்டன் அரசு மனித உரிமை மீறல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பிரிட்டனுக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில் புதிய சட்டம் இயற்ற உள்ளது. இந்தச்
சட்டத்தைப் பயன்படுத்தி குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை இங்கிலாந்துக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்க உள்ளதாக மனித உரிமைப் பிரசாரகர்கள் தெரிவித்துள்ளனர்.

2005-ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் நுழைய மோடிக்கு தடை விதிக்கப்பட்டு வரும் நிலையில் இங்கிலாந்திலும் அவர் நுழைய விரைவில் தடைவிதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இங்கிலாந்தைச் சேர்ந்த தெற்காசிய ஒருமைப்பாட்டுக் குழுவின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், மற்ற நாடுகளில் மனித உரிமைகளை மீறியதாக குற்றம் சாட்டப்படுபவர்களை பிரிட்டன் கண்காணிப்பதை நாங்கள் ஆதரிக்கவில்லை. ஆனால் இதுபோன்ற சட்டம் இயற்றப்பட்டால் அதைப் பயன்படுத்தி நரேந்திர மோடி வருவதைத் தடுக்க வேண்டும்.

ஏனெனில் குஜராத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டதில் நரேந்திர மோடிக்கு பங்கு உள்ளதாக பல்வேறு மனித உரிமைக் குழுக்களும், ஆம்னஸ்டி உள்ளிட்ட சுயேச்சை அமைப்புகளும் தெரிவித்துள்ளன  என்று  அச்செய்தித் தொடர்பாளர் சுட்டிக் காட்டினார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக