புதுடெல்லி:அடுத்தடுத்து ஒவ்வொரு மாநில பிரிவுகளிலும் ஏற்படும் குழப்பங்களையும், பிரச்சனைகளையும் தீர்ப்பதில் பா.ஜ.க மேலிடத்திற்கு இப்பவே கண்ணைக்கட்ட ஆரம்பித்துவிட்டதாம். கர்நாடகாவில் எடியூரப்பாவும், ராஜஸ்தானில் வசுந்தராஜே சிந்தியாவும் தம் வசம் வைத்திருக்கும் எம்.எல்.ஏக்களை காட்டி பா.ஜ.க மேலிடத்தை மிரட்டி வரும் வேளையில், குஜராத்தில் முன்னாள் முதல்வரும் பா.ஜ.கவின் மூத்த தலைவருமான கேசுபாய் பட்டேல் மோடி எதிர்ப்பை கிளறிவிட்டு கட்சிக்கு அச்சுறுத்தலை விடுத்து வருகிறார்.
ஜார்கண்டில் பா.ஜ.க சார்பாக மாநிலங்களை வேட்பாளராக நிறுத்தப்பட்ட அலுவாலியா தோல்வியை தழுவியது கட்காரிக்கு ஏற்பட்ட தலைவலி கொஞ்சநஞ்சமல்ல.
பா.ஜ.க என்றால் சுஷ்மாவுடைய, ஜெட்லியுடைய அல்லது வாஜ்பாயின் கட்சி அல்ல என்று கட்கரி வெளிப்படையாக கூறியதன் மூலம் பா.ஜ.க தலைமையின் கருத்து வேறுபாடு பல்லிளித்தது.
சட்டவிரோத சுரங்கத் தொழில் வழக்கில் கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது சி.பி.ஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் மூலம் எடியூரப்பா கொஞ்ச நாட்கள் வாயை மூடுவார் என பா.ஜ.க மேலிடம் கருதியது. முதல்வர் பதவியை கைப்பற்ற மல்லுக்கு நின்ற எடியூரப்பா, தற்பொழுது லிங்காயத் சமூகத்தைச் சார்ந்த அமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டரை முதல்வராக்க கோரி மீண்டும் பா.ஜ.க மேலிடத்தை சிக்கலில் ஆழ்த்தியுள்ளார்.
119 பா.ஜ.க எம்.எல்.ஏக்களில் 70 பேரின் ஆதரவு தனக்கு இருப்பதாக கூறும் எடியூரப்பா, 40 எம்.எல்.ஏக்கள் மற்றும் 9 அமைச்சர்களின் ராஜினாமா கடிதம் தன் வசம் இருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார். தேவைப்பட்டால் கட்சியை விட்டும் விலகுவேன் என மிரட்டல் விடுத்து பா.ஜ.க மேலிடத்திற்கு கிலியை ஏற்படுத்தியுள்ளார் எடியூரப்பா.
அதேவேளையில், கர்நாடகா பா.ஜ.க முதல்வர் சதானந்தா கவுடா டெல்லிக்கு சென்று நிதின்கட்கரியுடன் சந்திப்பை நடத்தியுள்ளார்.
ராஜஸ்தானில் மூத்த பா.ஜ.க தலைவர் குலாப்சந்த் கட்டாரியா நடத்த திட்டமிட்டிருந்த லோக் ஜாகரன் யாத்திரையை சாமர்த்தியமாக தடுத்து நிறுத்தி, ராஜஸ்தானில் பா.ஜ.க என்றால் நான் தான் என்பதை நிரூபித்துள்ளார் வசுந்தராஜே சிந்தியா.
முந்தைய பா.ஜ.க அரசில் உள்துறை அமைச்சராக பதவி வகித்த கட்டாரியா, தெற்கு ராஜஸ்தானில் செல்வாக்கு மிகுந்த தலைவர் ஆவார். கட்டாரியா நடத்தும் யாத்திரை வெற்றிப்பெற்றால், கட்சியில் தனது இடம் காலியாகிவிடுமோ என அஞ்சிய வசுந்தராஜே, என்ன விலை கொடுத்தேனும் கட்டாரியாவின் யாத்திரையை தடுக்க துணிந்தார். கட்சியில் இருந்து ராஜினாமாச் செய்யப்போவதாகவும், தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் தன்னிடம் ராஜினாமா கடிதங்களை வழங்கியுள்ளதாகவும் வசுந்தராஜே மிரட்டவே, மிரண்டுப்போன பா.ஜ.க மேலிடம் வசுந்தராஜேவிடம் மண்டியிட்டது. கட்டாரியாவை நிர்பந்தித்து அவரது யாத்திரையை ரத்துச்செய்தது பா.ஜ.க தலைமை.
மோடியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், கட்சியில் இருந்து விலகியிருந்த முன்னாள் முதல் அமைச்சரும், 82 வயதான மூத்த பா.ஜ.க தலைவருமான கேசுபாய் பட்டேல், வருகிற குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் மோடியை தோற்கடிப்பதற்கான முயற்சிகளை துவக்கியுள்ளார். மோடியின் ஆட்சியில் அனைத்து மக்களும் பாதுகாப்பற்ற சூழலில் வாழ்வதாக கேசுபாய் பகிரங்கமாக புகார் கூறினார். குஜராத் மக்களில் 18 சதவீத பட்டேல் சமூகத்தின் வாக்குகள் மோடிக்கு கிடைக்க கூடாது என்பதில் கேசுபாய் குறியாக உள்ளார். மோடியை எதிர்த்து கேசுபாய் பகிரங்கமாக களமிறங்கியது சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.கவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என பா.ஜ.க மேலிடம் கருதுகிறது. மோடிக்கு எதிரான பிரச்சாரத்தை நிறுத்த கேசுபாய்க்கு பா.ஜ.க மேலிடம் அறிவுறுத்திய போதும் கேசுபாய் கேட்டபாடில்லை. ஆக மொத்தத்தில் தலையை பிய்த்துக்கொள்ளுகிறது பா.ஜ.க மேலிடம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக