செவ்வாய், மே 15, 2012

அபுதாபியில் நடைபெற்ற “கல்வியின் மூலம் சக்திப்படுத்துதல்” கலந்துரையாடல் நிகழ்ச்சி

அபுதாபி:Emirates India Fraternity Forum (EIFF) ஏற்பாடு செய்திருந்த “கல்வியின் மூலம் சக்திப்படுத்துதல்” (Empowerment Through Education) என்ற கலந்துரையாடல் (TABLE TALK) நிகழ்ச்சி கடந்த 12-ம் தேதி சனிக்கிழமை அன்று அமீரகத் தலைநகரமான அபுதாபியில் சிறப்பாக நடைபெற்றது.

சரியாக மாலை 7.45 மணிக்கு நிகழ்ச்சி துவங்கியது. ஆரம்பமாக அருள்மறை வசனங்களை ஓதினார் சகோ. ஜுனைத் அவர்கள். அதன் பின்னர் சகோ. முனவ்வர் அவர்கள் அனைவரையும் வரவேற்றதோடு நிகழ்ச்சியைத் தொகுத்தும் வழங்கினார்.
பின்னர் “இஸ்லாமியப் பார்வையில் நேர நிர்வாகம்” நூலாசிரியர் சகோ. எம்.எஸ். அப்துல் ஹமீது  அவர்கள் கலந்துரையாடலின் மையக்கருத்தைப் பற்றிய அறிமுகவுரையை நிகழ்த்தி நிகழ்ச்சியை இனிதே துவக்கி வைத்தார். இஸ்லாம் கல்விக்குக் கொடுத்துள்ள முக்கியத்துவம் குறித்தும், பண்டைய முஸ்லிம்கள் கல்வியில் சிறந்து விளங்கியது குறித்தும், தற்போதைய சமுதாயம் கல்வியில் பின்தங்கியுள்ள அவல நிலை குறித்தும் அவர் தனது அறிமுகவுரையில் குறிப்பிட்டார்.
பின்னர் தொகுப்பாளர் சகோ. முனவ்வர் அவர்கள் அமீரகத்தில் நல்ல பல சமூகப் பணிகளை ஆற்றி வரும் EIFFன் பணிகள் குறித்த ஒரு பார்வையை வழங்கினார்.
அதன் பின்னர் மனம் திறந்த கலந்துரையாடல் ஆரம்பமானது. முஸ்லிம் சமுதாயத்தை கல்வி ரீதியாக முன்னேற்றுவதற்கு என்னென்ன செய்யலாம், அதற்கு தாங்கள் எந்தெந்த வழிகளில் உதவ முடியும் என்ற அடிப்படையில் ஆக்கபூர்வமான பல கருத்துகள் முன் வைக்கப்பட்டன.  கலந்து கொண்ட அனைவரும் தங்களுடைய கருத்துகளை தெளிவாக பதிவு செய்தனர்.
இறுதியாக,  பத்திரிகையாளர்  சகோ. அ. செய்யது அலீ அவர்கள் இருட்டில் மறைந்து போன நம் சமுதாயத்தினரின் கல்வியை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவது பற்றிய வழிமுறைகளை பல வரலாற்றுக் குறிப்புகளுடன் கோடிட்டு நிறைவுரை ஆற்றினார்.
அபுதாபியில் பணியாற்றும் பொறியாளர்கள், சாப்ட்வேர் தொழில்நுட்பவியலாளர்கள், வணிகர்கள், சார்ட்டட் அக்கவுண்டண்ட் நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள் இதில் கலந்து நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக