செவ்வாய், ஜூன் 05, 2012

சர்க்கரை வியாதி இருக்கா? மது குடிக்காதீங்க

Diabetes Tip Don T Drink Alcohol Excess
 சர்க்கரை வியாதி உள்ளவர்கள் கண்டிப்பாக புகைபிடிப்பது, மது அருந்துவது கூடாது என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இவற்றை நிறுத்தாவிட்டால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவது மட்டுமல்ல, கால் அழுகல் வியாதி அதிக விரைவாக தாக்கும் என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
நீரிழிவு நோயாளிகள் அதிகம் பாதிப்பப்படுவது கால் நரம்புகளினால்தான். எனவே பாத நரம்புகள் பாதிக்காத அளவிற்கு பாதுகாப்பான நடவடிக்களை மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். அவர்கள் தினமும் கால்களை, பாதங்களை நன்கு கவனிக்க வேண்டும். வெடிப்புகள், காயங்கள், கால் ஆணிகள், எந்த பாகமாவது கடினமாக கெட்டியாகி இருக்கிறதா என்றெல்லாம் பார்க்க வேண்டும். காலில் சிறுபுண், ஆணிகள் போன்றவை இருந்தால் சுய சிகிச்சை செய்யாமல் உடனே டாக்டரை அணுகவேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கால்களுக்கென்றே சில உடற்பயிற்சிகள் உள்ளன. அவற்றை அறிவுரைப்படி செய்து வரவும். உடற்பயிற்சிக்கு முன்பும் பின்பும், கால்களை நன்றாக பரிசோதித்துக் கொள்ள வேண்டும். நடப்பது நல்ல பயிற்சி, தினமும் 1 / 2 மணி அல்லது 1 மணி நேரம், நடக்க வேண்டும். கால்களைத் தினமும் இளஞ் சூடான வெந்நீரில் மென்மை யான சோப் ஒன்றின் உதவியால் கழுவுங்கள்.தூய்மையான துண்டு ஒன்றினால் பாதத்தை, குறிப்பாக விரல் இடுக்குகளை ஈரமின்றித் துடையுங்கள். அழுத்தித் துடைக்காதீர்கள். இதனால் சருமத்தில் விரிவு ஏற்பட்டுத் தொல்லை உண்டாக்கலாம். கால் விரல்களைச் சிறிதளவு நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் தடவிப் பிடித்து விடுங்கள். பாதக்கால்கள் மென்மையாக இருக்கும் படி இலேசாக எண்ணெய் பூசுங்கள்.

நீரிழிவு நோயாளிகள் உபயோகப்படுத்தும் செருப்பில் கவனமாக இருக்க வேண்டும். அவை மென்மையாகவும், அணிவதற்கு எளிதாகவும் இருக்க வேண்டும். புதிதாக அவைகளை வாங்கி அணிகின்ற போது கவனமாக இருக்க வேண்டும். நகங்களை வெட்ட வேண்டியிருந்தால் ஒட்ட வெட்டாதீர்கள். சிறிதளவு விட்டு வெட்டுங்கள். தசைக்குள் இருக்கும் நகத்தையும், விரல் மூலைகளிலுள்ள நகத்தையும் வெட்டாதீர்கள். கால்களில் சிறிய, மிகச்சிறிய காயம், சிராய்ப்பு ஏற்பட்டாலும் மருத்துவரிடம் தெரிவியுங்கள்.

நீரிழிவு நோயாளிகள் மதுப்பழக்கம், புகைப்பழக்கம் உள்ளவர்களாக இருந்தால் அந்த பழக்கத்தை விட்டு விடுவது நல்லது. உடனடியாக விட முடியாதவர்கள் மருத்துவர்களின் ஆலோசனை பெற்று உடலில் ரத்த சர்க்கரை அதிகரிக்காத அளவிற்கு அருந்த வேண்டும். ஏனெனில் உடலின் ரத்த சர்க்கரையின் மீது நேரடி பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது மது. இதனால் ஹைபோகுளுக்கோமியா என்ற பாதிப்பு ஏற்படும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

மது அருந்துபவர்கள் அதனுடன் கார்பனேட் அடங்கிய சோடா, குளிர்பானம் கலந்துதான் குடிக்கின்றனர். இதுவும் அபாயகரமானது. எனவே நீரிழிவு நோயாளிகள் வெறும் வயிற்றில் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக