குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அப்துல் கலாம் அறிவித்துள்ளது வருத்தமளிக்கிறது. எனினும், கலாம்தான் "மக்களின் குடியரசுத் தலைவர்' என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ஃபேஸ்புக் இணையதளத்தில் திங்கள்கிழமை கூறியுள்ளதாவது:அப்துல் கலாம் நேர்மையானவர்; இளைய தலைமுறைக்கு வழிகாட்டி. கலாமை குடியரசுத் தலைவராக்க வேண்டும்
என்ற மக்களின் குரலுக்கு சில அரசியல் கட்சிகள் செவிசாய்க்கவில்லை. ஊழல், மறைமுக பேரத்தில் ஈடுபட்டுவரும் அரசியல்வாதிகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்.
சில தன்னலமிக்க அரசியல்வாதிகள், நீதிநெறி பிறழ்ந்து மக்களிடமிருந்து அன்னியப்பட்டுவிட்டனர். நாட்டை இருள் சூழ்ந்துள்ளது. பணம், அதிகாரம், ஊழல் மூலம் பொதுநலம், வாழ்வியல் மதிப்பீடுகள் சமரசத்துக்கு உள்ளாக்கப்பட்டு விட்டன.எனினும், மக்களின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. அவர்கள் இந்திய அரசியலை தூய்மைப்படுத்தி, நேர்மை, நீதிநெறிகளை மீட்டெடுப்பார்கள். நாட்டின் நலனுக்காக குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி'' என்று மம்தா தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக