வியாழன், ஜூன் 07, 2012

உ.பி கலவரம்:பா.ஜ.க, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர்கள் கைது !

kosi kalan riotகோஸிகாலான்:உ.பி மாநிலம் மதுரா மாவட்டத்தில் உள்ள கோஸிகாலான் நகரில் அண்மையில் முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கலவரத்தின் பின்னணியில் செயல்பட்ட பா.ஜ.க, பகுஜன்சமாஜ் கட்சியின் முக்கிய தலைவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால், கலவரத்தில் நேரடி தொடர்புடைய ஆளும் சமாஜ்வாதி கட்சியின் மாவட்டத் தலைவரை போலீசார் இதுவரை
கைது செய்யவில்லை.
முன்னாள் அமைச்சரும், பகுஜன்சமாஜ் கட்சி தலைவர்களில் ஒருவருமான சவுதரி லட்சுமி நாராயணன்சிங், அவருடைய சகோதரரும், எம்.எல்.சியுமான சவுதரி லெக்ராஜ், மருமகன் நரதேவ் மற்றும் பா.ஜ.க தலைவர் ஹரி பட்டேல் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பா.ஜ.க, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர்களுடன் கலவரத்தில் பங்கேற்ற சமாஜ்வாதிக் கட்சியின் மாவட்ட தலைவர் கோவிந்த் சிங்கின் பெயர் எஃப்.ஐ.ஆரில்(முதல் தகவல்அறிக்கை) இடம்பெற்ற பிறகு அவரை போலீசார் கைது செய்யவில்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
மாயாவதி அரசில் விவசாய அமைச்சராக பதவி வகித்தவர் லட்சுமி நாராயணன் சிங். கலவரத்தை தூண்டுதல், கொலை மற்றும் சதித்திட்டம் தீட்டியது தொடர்பாக இவர் மீது வழக்குப் பதிவுச் செய்யப்பட்டுள்ளது. கொலைச் செய்யப்பட்ட நபர்களில் ஒருவரான முஹம்மது ஸலீமின் சகோதரர் அளித்த புகாரைத் தொடர்ந்து போலீஸ் லட்சுமி நாராயணனை கைது செய்தது என கூடுதல் எஸ்.பி பிரமோத் குமார் திவாரி தெரிவித்துள்ளார்.
கலவரம் தொடர்பாக இதுவரை ஏழு எஃப்.ஐ.ஆர்கள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன. 71 பெயர்கள் எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ளன. 1000 பேர் கலவரத்தில் பங்கேற்றதாகவும் எஃப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக