புதுடெல்லி:பா.ஜ.கவிலும், சங்க்பரிவாரத்திலும் வளர்ந்துவரும் உட்கட்சி பூசல் ஆர்.எஸ்.எஸ்ஸின் அதிகாரப்பூர்வ ஏட்டின் நரேந்திர மோடிக்கு எதிரான விமர்சனம் மூலம் மேலும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஆர்.எஸ்.எஸ்ஸின் அதிகாரப்பூர்வ ஏடான பாஞ்சசன்யாவின் புதிய பதிப்பில் குஜராத் முஸ்லிம் படுகொலை புகழ் நரேந்திரமோடியின் செயல்பாட்டு ரீதியும், இயக்க ரீதியான
ஒழுக்கங்கள் குறித்தும் விமர்சனம் இடம் பெற்றுள்ளது.
அந்த ஏட்டில் கூறியிருப்பது: பிரதமர் பதவியில் அமர கட்சியில் நிறைய பேர் உள்ளனர். மோடி தனது செயல்பாட்டு ரீதி குறித்து மீளாய்வு செய்யவேண்டும். பா.ஜ.க தேசிய செயற்குழு கூட்டத்தில் சஞ்சய் ஜோஷியின் ராஜினாமாவைக் கோரிய மோடியின் நிலைப்பாடு மீளாய்வுக்கு உட்பட்டது.
சங்க்பரிவார உறுப்பினரான மோடி, சக உறுப்பினரிடம் பகைமை பாராட்டுவது சரியல்ல. பா.ஜ.க தேசிய செயற்குழுவில் சஞ்சய் ஜோஷி பங்கேற்பது குறித்து ஊடகங்களில் தவறான புரிந்துணர்வை ஏற்படுத்தியது ஏன்?
பிரதமர் பதவிக்கான வேட்பாளர் குறித்த விவகாரத்தில் தீர்மானம், பொதுத் தேர்தலுக்கு பின்னர் எடுத்தால் போதும். இவ்வாறு அப்பத்திரிகை கூறியுள்ளது.
பா.ஜ.கவின் தேசிய செயற்குழு கூட்டத்தில் தான் பங்கேற்க வேண்டுமானால், தனது முக்கிய எதிரியான சஞ்சய் ஜோஷி தனது பதவியை ராஜினாமாச் செய்யவேண்டும் என மோடி நிபந்தனை விதித்தார். இதனைத் தொடர்ந்து பா.ஜ.க மோடியிடம் சரணடைந்து சஞ்சய் ஜோஷியை ராஜினாமாச் செய்யவைத்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக