வியாழன், ஜூன் 07, 2012

ஜீ டிவி 'டாக் ஷோ' மூலம் அம்பலத்திற்கு வந்த 3 பேர் படுகொலை-விழுப்புரத்தில் பரபரப்பு !

 On Tv Talk Show Teen Nails Her Father In Triple Murder விழுப்புரம்: விவசாயி ஒருவர் நகை, பணத்திற்காக தனது நண்பரையும், அவரது மகள் மற்றும் மருமகனையும் கொன்று புதைத்தார். இந்தத் தகவலை அந்த விவசாயியின் மகள், டிவி டாக் ஷோ ஒன்றில் அம்பலப்படுத்தினார். இதையடுத்து போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூன்று பேரின் எலும்புக் கூடுகளையும் தோண்டி எடுத்தனர்.4 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த சம்பவம் டிவி டாக் ஷோ மூலம் வெளியானதால் விழுப்புரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த நல்லான்பிள்ளை பெற்றாள் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவர் தனது குடும்பத்தினருடன் விழுப்புரம் அருகே உள்ள எம்.குச்சிப்பாளையம் கிராமத்திற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு சென்று விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி பரமேஸ்வரி. இவர்களுக்கு பார்கவி (17) என்ற மகள் இருக்கிறார்.
பார்கவி அதே கிராமத்தை சேர்ந்த குமார் என்பவரின் மகன் சதீஷ் என்பவரை காதலித்து வந்தார். இந்த காதலுக்கு முருகன் பலத்த எதிர்ப்பு தெரிவித்தார். இதை பார்கவி தனது காதலன் சதீஷிடம் கூறினார். இந்த காதல் குறித்து பஞ்சாயத்தார் முன்னிலையிலும் பேசப்பட்டது. அங்கும் பார்கவி தான் திருமணம் செய்தால் சதீஷை தான் திருமணம் செய்வேன் என்று கூறிவிட்டார்.
சதீஷ் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இதனால் இங்குள்ள சில நண்பர்கள் மூலம் அவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நிர்மலா பெரியசாமி நடத்தி வரும் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சிக்கு தனது காதலியை அழைத்துக்கொண்டு சென்றார். தனது காதலுக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்ற ஆவலில் அவர் அந்த நிகழ்ச்சிக்கு பார்கவியை அழைத்துச் சென்றார்.
இந்த நிகழ்ச்சி கடந்த மாதம் 28-ந் தேதி நடந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பார்கவியின் தந்தை முருகனையும் தொலைக்காட்சி நிலையத்தார் அழைத்திருந்தனர்.
அப்போது நிகழ்ச்சி நடத்துபவரிடம் பார்கவி, தனது தந்தை நல்லவர் இல்லை. அவர் ஏற்கனவே சில வருடங்கள் முன்பு நகை பணத்துக்காக 3 பேரை கொலை செய்து குச்சிப்பாளையம் கிராமத்தில் புதைத்துள்ளார் என்ற அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்தார்.
நல்லான்பிள்ளை பெற்றாள் கிராமத்தை சேர்ந்த முருகனின் நண்பரான சேகர் என்பவரின் மனைவி ஜீவா (35) இந்த நிகழ்ச்சியை டி.வி.யில் பார்த்துக் கொண்டிருந்தார். ஜீவாவின் கணவர் சேகர், மகள் லாவண்யா, மருமகன் சிலம்பரசன் ஆகியோர் 3 ஆண்டுகளுக்கு முன்பு முருகன் வீட்டுக்கு செல்வதாக கூறிச் சென்றவர்கள் பின்னர் வீடு திரும்பவில்லை.
தனது கணவர் உள்பட 3 பேரும் எங்கேயோ தலைமறைவாக வாழ்ந்து வருகிறார்கள் என்றே ஜீவா நினைத்துக்கொண்டிருந்தார். இதனால் அவர் தனது தாலியை கூட கழற்றாமல் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
ஆனால், டிவி நிகழ்ச்சியில் முருகனின் மகள் தனது தந்தை ஏற்கனவே 3 பேரை கொலை செய்திருக்கிறார் என்று கூறியதை கேட்டதும் ஜீவாவுக்கு அந்த 3 பேரும் தனது கணவர் மற்றும் மகள், மருமகனாக இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து உடனடியாக ஜீவா விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். பார்கவியிடமும் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
நேற்று மதியம் பார்கவி போலீசாரிடம் 3 பேரின் பிணங்களை புதைத்த இடத்தை அடையாளம் காட்டினார். விழுப்புரம் தாசில்தார் ராஜேந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டு சேகர் ஆகியோர் முன்னிலையில் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் மேற்பார்வையில் குச்சிப்பாளையம் கிராமத்தில் சந்திரசேகர் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் தரைக்கிணற்றை தோண்ட ஆரம்பித்தனர்.
3 அடி தோண்டியதுமே ஒவ்வொன்றாக 3 எலும்புக்கூடுகள் கிடைத்தன. இதில் ஒன்று பெண் எலும்புக்கூடு என்றும், மற்ற 2 எலும்புக்கூடுகளும் ஆணின் எலும்புக்கூடுகள் என்றும் தெரியவந்தது. அதோடு அந்த எலும்புக்கூடுகள் ஜீவாவின் கணவர் சேகர், மகள் லாவண்யா, மருமகன் சிலம்பரசன் ஆகியோருடையது தான் என்பதும் தெரியவந்தது.
ஏன் இந்தக் கொடூரக் கொலை?
2008-ம் ஆண்டு முருகனின் உறவினரும், அவரது சொந்த ஊர்க்காரருமான சேகரின் மகள் லாவண்யா சிலம்பரசன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த காதல் திருமணத்திற்கு சிலம்பரசனின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
எனவே சேகர் தனது மகளையும், மருமகனையும் குச்சிப்பாளையத்தில் உள்ள முருகன் வீட்டுக்கு அடைக்கலமாக அனுப்பிவைத்தார். சிறிது காலம் இவர்கள் 2 பேரும் இங்கு இருக்கட்டும், பிரச்சினை முடிந்ததும் அவர்களை அழைத்துக்கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
முருகனும் அதற்கு சம்மதம் தெரிவிக்கவே லாவண்யாவையும், சிலம்பரசனையும் முருகன் வீட்டில் விட்டுவிட்டு சேகர் நல்லான்பிள்ளை பெற்றாள் கிராமத்தில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பி விட்டதாக தெரிகிறது.
லாவண்யா திருமண நகைகள் ஏராளமாக அணிந்திருந்ததாக தெரிகிறது. அதோடு மணமக்கள் கையில் பணமும் அதிகம் இருந்தது. இந்த நகை, பணத்தின் மீது முருகனுக்கு ஒரு கண் இருந்தது. தக்க சமயம் பார்த்து முருகன், சிலம்பரசனையும், லாவண்யாவையும் கொலை செய்து புதைத்து விட்டதாக தெரிகிறது.
இந்த விவரம் தெரியாமல் சில நாட்கள் கழித்து தனது மகளையும், மருமகனையும் பார்க்க முருகன் வீட்டுக்கு சேகர் வந்தார். வீட்டில் அவர்கள் இருவரும் இல்லாததால் அவர் பலரிடமும் விசாரித்தார். இதில் சேகருக்கு நடந்த சம்பவம் தெரியவரவே முருகனிடம் தகராறு செய்தார். இதனால் சேகரையும் முருகன் கொலை செய்து அதே இடத்தில் புதைத்துவிட்டார்.
மனைவியுடன் டாக் ஷோவில் கலந்து கொண்ட முருகன் அதன் பி்ன்னர் தலைமறைவாகி விட்டார். அவரைப் போலீஸார் தீவிரமாக தேடி வருகி்ன்றனர். தலைமறைவாவதற்கு முன்பு தனது மனைவியிடம் இனிமேல் நீ என்னை உயிருடன் பார்க்க முடியாது என்று கூறி விட்டுச் சென்றுள்ளார் முருகன் என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக