அதிமுக போட்ட பிச்சையில் தான் தேமுதிகவுக்கு 29 எம்.எல்.ஏ.க்கள் கிடைத்தனர் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் எம்.எல்.ஏ. பேசிய பேச்சு தேமுதிக வட்டாரத்தை கொதிப்படைய வைத்துள்ளது.
அப்போது அவர் பேசியதாவது,
தேமுதிகவினருக்கு அடிப்படை நாகரீகமோ, அடிப்படை சட்டமோ தெரியாது. அதை கட்சி தொண்டர்களுக்கு சொல்லிக் கொடுக்க அக்கட்சியின் தலைமைக்கும் இது தெரியாது. அது தான் கொடுமை. பகுத்தறிவு, நேர்மை, நீதி, ஜனநாயகம் இவற்றையெல்லாம் தெரிந்து கொண்டு தேமுதிகவினர் அரசியலுக்கு வர வேண்டும். அப்போது தான் அரசியல் உருப்படும்.
தேமுதிக 29 சட்டப்பேரவை உறுப்பினர்களை கொண்டுள்ளது என்றால் அதற்கு அதிமுக போட்ட பிச்சை தான் காரணம் என்பதை தேமுதிகவினரும், அதன் தலைமையும் உணர வேண்டும். இல்லை எனில் உணர வைக்கப்படுவார்கள். புதுக்கோட்டையில் 1.20 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெறுவதை யாராலும் தடுக்க முடியாது. அதே போல் தேமுதிகவுக்கு ஏற்படப்போகும் படுதோல்வியையும் யாராலும் தடுக்க முடியாது.
மக்களுக்கு எதிராக ஆட்சி செய்த திமுகவை வீழ்த்தி தொலை நோக்கு பார்வையுடன் மக்களுக்காக முதல்வர் ஜெயலலிதா பணியாற்றி வருகின்றார். அவரது கரத்தை வலுப்படுத்த அதிமுகவை மக்கள் ஆதரி்க்க வேண்டும் என்றார்.
முன்னதாக புதுப்பட்டியில் உள்ள கடை வீதியில் வாகனத்தை நிறுத்திவிட்டு சரத்குமார் பிரச்சாரத்தை தொடங்க முயன்றார். அப்போது அந்த வழியாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா பிரச்சாரம் மேற்கொள்ள இருந்ததால் அக்கட்சி தொண்டர்கள் பிரேமலதாவை வரவேற்க கட்சி கொடியுடன் காத்திருந்தனர்.
அப்போது சரத்குமார் பேசத் தொடங்கியதும் தேமுதிக கொடியை காட்டி விஜயகாந்த் வாழ்க, பிரேமலதா வாழ்க என அவர்கள் கோஷமிட்டனர். பதிலுக்கு சமகவினர் சரத்குமார் வாழ்க என கோஷம் போட அங்கு சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இரு தரப்பையும் அங்கிருந்த போலீசார் அமைதிப்படுத்தினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக