புதன், ஜூன் 06, 2012

ரெயில் பார்சல் கட்டணம் 25 சதவீதம் அதிரடி உயர்வு: ரெயில்வே அமைச்சகம் அறிவிப்பு !

ரெயில் பார்சல் கட்டணம் 25 சதவீதம் அதிரடி உயர்வு: ரெயில்வே அமைச்சகம் அறிவிப்புரெயில் சரக்கு கட்டணம் கடந்த மார்ச் மாதம் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் இப்போது அதிரடியாக பார்சல் கட்டணம் 25 சதவீத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. இது ரெயிலில் பார்சல் அனுப்புபவர்களுக்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது.பார்சல் கட்டண உயர்வு குறித்து ரெயில்வே அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-கட்டண பட்டியலை சீராக்கும் நோக்கத்தில் பார்சல், லக்கேஜ் கட்டணங்களை 6 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது உயர்த்தி இருக்கிறோம். அனைத்து பொருட்களுக்கும் இந்த கட்டண உயர்வு சுமார் 25 சதவீத அளவுக்கு இருக்கும். புதிய கட்டண விகிதம் கடந்த 1-ந் தேதி அமலுக்கு வந்து உள்ளது.
 
புதிய கட்டண உயர்வு பத்திரிகைகள், நாளிதழ்கள், மருந்துப்பொருட்கள், பயறு வகைகள், மாவு வகைகள் போன்ற அனைத்துக்கும் பொருந்தும்.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
ரெயில்வே பட்ஜெட்டில் அறிவிக்காமல், இப்போது பார்சல் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதே? என அந்த அதிகாரியிடம் கேட்டபோது அவர், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கட்டண உயர்வு செய்வதற்கு ரெயில்வே அமைச்சகத்துக்கு ரெயில்வே சட்டம் அனுமதி வழங்கி உள்ளது என பதில் அளித்தார்.
 
ரெயில்களில் அனுப்பப்படும் பார்சல்களுக்கு ஸ்டேண்டர்டு, பிரிமியம், ராஜ்தானி என மூன்று பிரிவுகளில் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. அதாவது, எக்ஸ்பிரஸ் ரெயில் அல்லாத பிற சாதாரண ரெயில்களில் அனுப்பப்படுகிற பார்சல்கள் ஸ்டேண்டர்டு பிரிவின் கீழும், எக்ஸ்பிரஸ், மெயில் ரெயில்களில் அனுப்பப்படும் பார்சல்கள் பிரிமியம் பிரிவின் கீழும், ராஜ்தானி, சதாப்தி சொகுசு ரெயில்களில் அனுப்பப்படுகிற பார்சல்கள் ராஜ்தானி பிரிவின் கீழும் கட்டணம் வசூலிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக