வியாழன், டிசம்பர் 06, 2012

மாநிலங்களவையிலும் அரசை காப்பாற்றுமா மாயாவதி, முலாயம் கட்சிகள் ?

புதுடெல்லி: சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு அனுமதிக்கப்படும் விவகாரத்தில்  மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் வெற்றி பெற காங்கிரஸ் தீவிரம் காட்டி  வருகிறது.  கடந்த சில நாட்களாக மாநிலங்களவையில் தொடர்ந்து அமளி நிலவி வரும்  நிலையில்,இன்றாவது அவை அவை நடவடிக்கைகள் தொடருமா என்று
எதிர்பார்ப்பு  ஏற்பட்டுள்ளது.  சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடை அனுமதிப்பதை எதிர்த்து கொண்டுவரப்பட்ட  தீர்மானம் மக்களவையில் தோற்கடிக்கப்பட்டது.  இந்நிலையில் மக்களவையில் வெற்றி பெற்றதைப் போன்று, மாநிலங்களவையிலும்  வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய  முற்போக்கு கூட்டணி அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. 



இன்று பிற்பகல் 12.15 மணியளவில் அதிமுகவின் மாநிலங்களவை தலைவர்  மைத்ரேயன் விவாதத்தை தொடங்கி வைத்துப் பேசினார்.

இதனைத் தொடர்ந்து பல்வேறு கட்சித்  தலைவர்களும் அன்னிய முதலீடு பற்றி தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 


மாநிலங்களவை பொறுத்த வரையில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு  போதுமான எம்.பி.க்கள் ஆதரவு இல்லாததால் எதிர்க்கட்சிகளின் தீர்மானம் வெற்றி பெற  அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. 



அப்படி நேரிட்டால் மத்திய அரசுக்கு பெரும் பின்னடைவாக இது அமையும் எனக்  கருதப்படுகிறது. இதனால் எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகளை சமாளிக்க வேண்டிய  கட்டாயத்தில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தள்ளப்பட்டுள்ளது.


மாயாவதி, முலாயம் 


இதன் காரணமாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் நியமன  உறுப்பினர்களிடம் காங்கிரஸ் கட்சி பேச்சு நடத்தி வருகிறது.

அன்னிய முதலீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்த போதிலும், மக்களவையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் மத்திய அரசை மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாதி கட்சியும் மறைமுகமாக காப்பாற்றின.
ஆனால் மாநிலங்களவையில் எதிர்த்து வாக்களிக்கப்போவதாக சமாஜ்வாதி கூறியுள்ள நிலையில், அக்கட்சியை சரிக்கட்டும் நடவடிக்கையில் காங்கிரஸ் இறங்கி உள்ளது.
அதேப்போன்று மாயாவதியும், பதவி உயர்வில் தாழ்த்தப்பட்ட மற்றும்  பழங்குடியின வகுப்பினருக்கு இடஒதுக்கீடு அளிக்க கோரும் மசோதாவை நிறைவேற்ற உத்தரவாதம் கோருகிறார். இதைப்பொறுத்தே தனது ஆதரவு அமையும் என்று கூறும் அவரையும் சமாதானப்படுத்த காங்கிரஸ் தீவிரமாக முயற்சி மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 3 நாட்களாக  மாநிலங்களவை அமளியால் முற்றிலும் முடங்கின. அதே போல் இன்றும் அமளியில்  ஈடுபட்டால் அவை முடக்கப்படலாம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக