வெளிநாட்டுத் தொழிலாளிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதை குற்றச்செயலாகக் காட்டியதன் மூலம் சிங்கப்பூர் அரசாங்கம் அடிப்படை தொழிலாளர் உரிமைகளை மறுத்துள்ளது என சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் குற்றம்சாட்டியுள்ளது. சிங்கப்பூரில் பேருந்து போக்குவரத்து
நிறுவனத்தில் ஓட்டுநர்கள் இரண்டு நாள் வேலைநிறுத்தம் செய்யத் தூண்டினார்கள் என்று குற்றம்சாட்டி நான்கு சீன வெளிநாட்டுத் தொழிலாளிகள் நான்கு பேர் மீது கிரிமினல் குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில் ஹியுமன் ரைட்ஸ் வாட்சின் விமர்சனம் வருகிறது. சிங்கப்பூரில் கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் பெரிய அளவில் வேலைநிறுத்தம் எதுவும் நடந்ததில்லை. ஆகவே சென்ற மாதக் கடைசியில் சீனாவிலிருந்து இங்கு வந்து வேலைபார்க்கும் பேருந்து ஓட்டுநர்கள் நூற்றியெழுபது பேர் வேலைநிறுத்தம் செய்தபோது அது அரசாங்கத்தின் முழு கவனத்தையும் ஈர்த்திருந்தது.கிரிமினல் குற்றச்சாட்டு :
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட பேருந்து ஓட்டுநர்கள் சிங்கப்பூரின் சமூக ஒழுங்கிற்கு அச்சுறுத்தலாக இருந்தனர் என்று மனிதவள அமைச்சகம் குற்றம்சாட்டியுள்ளது.
சட்டவிரோத வேலைநிறுத்தத்திற்கு தூண்டுதலாக அமைந்தார்கள் என்று கிரிமினல் குற்றம்சாட்டப்பட்டு ஐந்து பேர் கைவிலங்குகளுடன் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிவந்துள்ளது.
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் 29 பேர் ஏற்கனவே நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகளுக்கு சிங்கப்பூர் மக்களின் ஆதரவு இருப்பதாகத் தெரிகிறது காரணம் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் எதிராக அவ்வூர் மக்களிடம் அந்தளவுக்கு அதிருப்தி காணப்படுகிறது.
ஆனால் சீனத் தொழிலாளிகள் மீதான குற்றச்சாட்டுகள் வாபஸ் பெறப்பட வேண்டும் என்று ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் கோரியுள்ளது.
பாரபட்சம் :
சிங்கப்பூரில் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு எதிராக காட்டப்படுகின்ற பாரபட்சங்கள் முடிவுக்கு வர வேண்டும் என்றும் அது குரல்கொடுத்துள்ளது.
உள்நாட்டுத் தொழிலாளர்களை ஒருவிதமாகவும், வெளிநாட்டுத் தொழிலாளிகளை ஒருவிதமாகவும், வெவ்வேறு நாட்டுப் பிரஜைகளை வெவ்வேறு விதமாகவும் நடத்துவதற்கு தொழில் நிறுவனங்களை அரசாங்கம் அனுமதிக்குமானால் அது நெருப்போடு விளையாடுவதுபோல ஆபத்தில் முடிந்துவிடலாம் என ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் எச்சரித்துள்ளது.
வேலைநிறுத்தம் செய்த சீன பேருந்து ஓட்டுநர்கள், மலேசியாவிலிருந்து வந்து அதே வேலையைச் செய்பவர்களுக்கு கூடுதல் சம்பளம் கொடுக்கப்படுவதாஅகவும், அதே வேலையை செய்யும் சிங்கப்பூர் பிரஜைகளுக்கு மேலும் கூடுதலான ஊதியம் வழங்கப்படுவதாகவும் முறையிடுகின்றனர்.
அத்தியாவசிய சேவைகள் என்று வரையறுக்கப்படும் போக்குவரத்து சேவை உள்ளிட்ட தொழில்துறைகளில் ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்வதற்கு 14 நாட்கள் முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என சிங்கப்பூர் சட்டங்கள் சொல்கின்றன.
அப்படி செய்யப்படாத வேலைநிறுத்தம் சட்டவிரோதச் செயல் என சிங்கப்பூர் அரசு கூறுகிறது.
ஆனால் சர்வதேச ஒப்பந்தங்களின் பிரகாரம் பேருந்து போக்குவரத்து சேவை என்பது அத்தியாவசிய சேவைகள் தொழில்துறை ஆகாது என ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் வாதிடுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக