வெள்ளி, டிசம்பர் 07, 2012

காஷ்மீரில் "மனித உரிமைகளை" மீறிய அதிகாரிகளின் பட்டியல்

இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீர் பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சட்டத்துக்குப் புறம்பான கொலைகள், நபர்கள் காணமல்போன சம்பவங்கள், பாலியல் வல்லுரவு போன்றவற்றில் சம்மந்தப்பட்டவர்கள் என்று தாம் கருதும் நூற்றுக்கணக்கான இந்திய படை அதிகாரிகளின் பெயர் விபரங்களை மனித
உரிமைகள்அமைப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. ராணுவ உயர் அதிகாரிகளின் பெயர்கள் சிலவும் இதில் இடம்பெற்றுள்ளன. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 1989 ஆம் ஆண்டு துவங்கிய ஆயுதப் போராட்டத்தின் காரணமாக பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இராணுவமும் காவல்துறையும் தொடர்ந்து பல வன்செயல்களை செய்துள்ளதாக ஐம்மு காஷ்மீரில் இயங்கும் மனித உரிமைகள் அமைப்பு ஒன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுயாதீன சட்டவல்லுனர்களால் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கையில், சுட்டுக்கொலை செய்தது, ஆட்கடத்தல் செய்தது, சித்ரவதை மற்றும் பாலியல் வன்புணர்ச்சி ஆகிய குற்றங்களை உயர் இராணுவ மற்றும் காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்து செய்து வந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.மேஜர் ஜெனரல், பிரிகேடியர், கர்னல் போன்ற பதவிகளில் இருக்கும் இராணுவ அதிகாரிகள் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் பல அதிகாரிகள் தீவிரவாதத்துக்கு எதிராக போரிட்டதன் காரணமாக அரசால் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டவர்கள்.

தற்போது நடைமுறையில் உள்ள தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அதிகாரப்பூர்வ தகவல்களைப் பெற்றும், காவல் துறையினரின் அறிக்கைகள் மற்றும் உறவினர்கள் மற்றும் நேரில் பார்த்த சாட்சியங்களிடமிருந்து பெறப்பட்ட விபரங்களின் அடிப்படையிலும் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.காணமல்போனோரின் பெற்றோர்களின் சங்கம் என்ற அமைப்பால் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கையில், 500 பேரின் பெயர் விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த அறிக்கை தமக்கு கிடைக்கவில்லை என்று தெரிவித்த இந்திய இராணுவப் பேச்சாளர், இந்த அறிக்கையை ஆராய்ந்த பிறகே இது பற்றி தம்மால் கருத்துக்கூற முடியும் என்றார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக