பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி பாதுகாப்பு பணிக்காக திருவண்ணாமலையில் இருந்து வந்தவாசிக்கு 10க்கும் அதிகமான ஆயுதப்படை பொலிசார் வரவழைக்கப்பட்டிருந்தனர்.அவர்கள் நேற்று மாலை 4 மணியளவில் தாலுகா அலுவலக சாலையில் உள்ள ஒரு பிரியாணி கடைக்கு சென்றனர். கடை உரிமையாளர் ரகமத்துல்லா(42), ‘பிரியாணி தீர்ந்துவிட்டது‘ எனக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆயுதப்படை பொலிசார், எங்களுக்கே பிரியாணி இல்லையா? எனக்கேட்டு தகராறு செய்துள்ளனர். அவர்களில் போதையில் இருந்த 2 பேர் ரகமத்துல்லாவை கீழே தள்ளியதாக தெரிகிறது. இதைப்பார்த்த பொதுமக்கள் பொலிசாரை தட்டிக்கேட்டுள்ளனர். அவர்களையும் மிரட்டி தகராறு செய்தனர். அதற்குள் ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டனர். இதுபற்றி தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் முருகன், எஸ்.ஐ. சாபுதீன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பொதுமக்களிடம் சமரசம் செய்து தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறினர். பின்னர் போதையில் தள்ளாடியபடி இருந்த பொலிஸ்காரர் ஒருவரை இன்ஸ்பெக்டர் தனது வாகனத்தில் ஏற்றிச் சென்றார்.
அப்போது அங்கிருந்த பொதுமக்கள் மேலும் ஒரு பொலிஸ்காரர் போதையில் உள்ளதாக கூறவே அவரை வேனில் ஏற்ற எஸ்.ஐ. மற்றும் பொலிசார் அழைத்து வந்தனர். லோக்கல் பொலிசாரிடமும் தகராறு செய்த அவர், அவர்களை பிடித்து தள்ளினார்.
இதனால் அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் உள்ளூர் பொலிசார், ஆயுதபடை பொலிஸ்காரரை பலவந்தமாக காவல் நிலையத்துக்கு இழுத்துச் சென்றனர். இதுகுறித்து கடை உரிமையாளர் ரகமதுல்லாவிடம் இன்ஸ்பெக்டர் எஸ்.முருகன் விசாரணை நடத்தினார். பாதுகாப்புக்கு வந்த பொலிஸ்காரர்கள் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் வந்தவாசியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக