புதுடெல்லி:பாப்ரி மஸ்ஜிதை மீண்டும் கட்டக்கோரியும், அதனை இடித்தவர்களை தண்டிக்கவும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று(டிசம்பர் 6) தர்ணா போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் கலந்துகொண்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் ஆற்றிய உரையில் கூறியது: “பாபரி மஸ்ஜித்
இடிப்பை மறக்கவேண்டும் என்று யார் முயற்சித்தாலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அதற்கு ஒருபோதும் அனுமதிக்காது. பாபரி மஸ்ஜித் மீண்டும் கட்டப்படும் வரை வரும் தலைமுறையினருக்கு பாபரியின் நினைவையும், எதிர்ப்புணர்வையும் பகிர்ந்து அளித்துக்கொண்டே இருப்போம்.
பாபரி முஸ்லிம்களுக்கும் மட்டுமான பிரச்சனை அல்ல. இது ஒரு தேசிய பிரச்சனை. பாபரி மஸ்ஜித் இடிப்பை மறக்கவேண்டும் என்று மதசார்பற்ற கட்சிகள் என்று கூறுவோர் மனதால் விரும்புகின்ற சூழல் கீழ் தரமானது. பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட வேளையில் பத்திரிகைகள் அனைத்தும் தலையங்கம் எழுதின. எல்லோரும் ஒரே குரலில் பாபரி மஸ்ஜிதை மீண்டும் கட்டவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். பாபரி மஸ்ஜிதை இடிக்கும் வேளையில் பூஜை அறையில் இருந்த அன்றைய பிரதமர் நரசிம்மராவ் கூட பாபரி மஸ்ஜித் மீண்டும் கட்டப்படும் என்று வாக்குறுதியளித்தார்.
ஆனால், 20 ஆண்டுகள் கழிந்த பிறகும் இது ஒரு முஸ்லிம் பிரச்சனையாக மட்டும் மாறிவிட்டது. அன்று மஸ்ஜிதை மீண்டும் கட்டவேண்டும் என்று கூறியவர்கள் எல்லோரும் இன்று மெளனம் சாதிக்கின்றனர். மத்திய அரசும் இதனை மறந்துவிட்டது. மஸ்ஜிதை இடிக்க சதித்திட்டம் தீட்டியவர்கள் என்று லிபர்ஹான் கமிஷன் சுட்டிக்காட்டிய எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி ஆகியோரெல்லம் இப்போழுது சுதந்திரமாக சுற்றித் திரிகின்றனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் திராணி மன்மோகன் சிங் அரசுக்கு இல்லை.
மஸ்ஜிதை மீண்டும் அதே இடத்தில் கட்டும் வரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் இதற்காக போராடிக் கொண்டே இருப்பார்கள். இவ்வாறு இ.எம்.அப்துற்றஹ்மான் கூறினார்.
பாபரி மஸ்ஜித் மீண்டும் கட்டவேண்டும் என்றும், நிரபராதிகளான முஸ்லிம்களை விடுதலைச் செய்யவேண்டும் என்றும் கூறுவது தீவிரவாதம் என்றால், நாங்கள் தீவிரவாதிகள் தாம் என்று டெல்லி சட்டப்பேரவை உறுப்பினரான முஹம்மது ஆசிஃப்கான் கூறினார்.
சிறுபான்மை தீவிரவாதம் என்று அரசும், ஊடகங்களும் பரப்புரைச்செய்வது அவதூறாகும். தீவிரவாதங்கள் அனைத்தும் அரசு ஆரம்பம் செய்வதாகும் என்று சீக்கிய பேரவை தலைவர் ஹர்மீந்தர் சிங் கூறினார்.
முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல் நாட்டிற்கு எதிரான தாக்குதல் என்று லோக் ராஜ் சங்கத் தலைவர் பிரவீண் தனது உரையில் கூறினார்.
பத்திரிகையாளர் ஸய்யித் முஹம்மது அஹ்மத் காஸ்மி, முஸ்லிம் பொலிட்டிக்கல் மூவ்மெண்ட் தலைவர் ஸலீம் ரஹ்மான், குவாமி பார்டி ஆஃப் இந்தியா தலைவர் என்.ஹஸ்னைன், எஸ்.டி.பி.ஐ தேசிய பொதுச் செயலாளர் ஹாஃபிஸ் மன்சூர் அலிகான், யாஸின் பட்டேல், ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் தலைவர் மவ்லானா உஸ்மான் பேக், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு உறுப்பினர்களான அனீஸ், பேராசிரியர் பி.கோயா, கலீமுல்லாஹ் சித்தீகி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைவர் முஹம்மது காலித், மஜ்லிஸே முஷாவரா தேசிய செயலாளர் டாக்டர் அன்வாருல் இஸ்லாம் ஆகியோர் உரையாற்றினர்.
தர்ணா போராட்டத்திற்கு பிறகு பல்வேறு அமைப்புகளின் தலைவர்களுடன் இணைந்து கண்டனப் பேரணியுடன் நிகழ்ச்சி முடிவுற்றது.
அலிசேனா, சி.பி.எம்(எம்.எல்), ஐஸா ஆகிய அமைப்புகளும் பாபரி மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகளை தண்டிக்கவேண்டும் என்று கோரி தர்ணா போராட்டம் நடத்தினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக