பெங்களூர்: காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகளை விட பாஜக தான் பெரிய தீய சக்தி என்று அண்மையில் அந்த கட்சியில் இருந்து விலகிய எதியூரப்பா தெரிவித்துள்ளார். கடந்த 40 ஆண்டுகளாக பாஜகவில் இருந்த கர்நாடக முன்னாள் முதல்வர் எதியூரப்பா கடந்த வெள்ளிக்கிழமை
அக்கட்சியில் இருந்து விலகினார். இத்தனை ஆண்டுகளாக தான் உழைத்த கட்சி இப்படி தன் முதுகில் குத்தும் என்று நினைத்ததேயில்லை என்று கண்ணீர் சிந்தினார். அவர் வரும் 9ம் தேதி கர்நாடகா ஜனதா கட்சி என்ற கட்சியைத் துவங்குகிறார்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,
காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனாததளத்தை விட பாஜக தான் பெரிய தீயசக்தி ஆகும். அதனால் ஒரு நாளும் நான் மீண்டும் பாஜவுக்கு திரும்ப மாட்டேன். முனிசிபாலிட்டி தலைவர் முதல் முதல்வர் பதவி வரை எனக்கு பாஜக அளித்துள்ளது. நான் கட்சிக்காக அனைத்தையும் தியாகம் செய்தேன். தென்னிந்தியாவில் பாஜக ஆட்சிக்கே வர முடியாது என்றிருந்தபோது நான் அதை ஆட்சிக்கு கொண்டு வந்தேன். ஷெட்டரை முதல்வராக்கி தவறு செய்துவிட்டேன். ஆனால் அவருடைய அரசை கவிழ்க்க விரும்பவில்லை. நான் தற்போது மகாத்மா காந்தி, அம்பேத்கர் மற்றும் ஜெயபிரகாஷ் நாராயணுடைய கொள்கைகளை பின்பற்றி வருகிறேன் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக