மாலை தீவுகள் தலைநகர் மாலேவில் உள்ள இப்ராகிம் நசிர் சர்வதேச விமான நிலையத்தை சுமார் 511 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பில் மேம்படுத்தும் ஒப்பந்த பணியை இந்திய நிறுவனமான ஜி.எம்.ஆர்., இன்ப்ராஸ்டக்சர் நிறுவனம் கடந்த 2010ம் ஆண்டு பெற்றது. மாலை தீவுகள் ஜனாதிபதியாக முகமது நசீத் இருந்த போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. மாலை தீவுகளில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தற்போது முகமது வாகித் தலைமையிலான அரசு
ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில் திடீரென இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக மாலை தீவுகள் அரசு தெரிவித்தது. முறைகேடுகள் மூலமாக இந்த ஒப்பந்தம் ஜி.எம்.ஆர்.இன்ப்ராஸ்டக்சர் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக அரசு குற்றம் சாட்டியது.
மாலை தீவுகளின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சிங்கப்பூர் நீதிமன்றத்தில் ஜி.எம்.ஆர்.இன்ப்ராஸ்டக்சர் நிறுவனம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இதை விசாரித்த நீதிமன்றம், மாலை தீவுகளின் நலனுக்கு ஏற்றவாறு செயல்பட அந்நாட்டு அரசுக்கு உரிமை உண்டு என்றும், எனினும் விதிமுறைகளை மீறி விமான நிலையம் எடுத்துக் கொள்ளப்படும் பட்சத்தில் உரிய நிவாரணம் கோரி ஜி.எம்.ஆர்.இன்ப்ராஸ்டக்சர் நிறுவனம் மனு செய்யலாம் என்றும் தெரிவித்திருந்தது.
தங்களுக்கு சாதகமாக உத்தரவு கிடைத்த உடனேயே செயலில் இறங்கிய மாலை தீவுகள் அரசு, நேற்று நள்ளிரவு அவசர அவசரமாக விமான நிலையத்தை ஜி.எம்.ஆர்.இன்ப்ராஸ்டக்சர் நிறுவனத்திடமிருந்து மாலை தீவுகள் அரசு எடுத்துக்கொண்டது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஜி.எம்.ஆர்.இன்ப்ராஸ்டக்சர் நிறுவனம், இந்த ஒப்பந்தத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும், நிறுவனங்களுக்கும் எவ்வித பிரச்னையும் இருக்காது என உறுதி தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நீதிபதியின் தீர்ப்பை முழுமையாக படித்த பின் அடுத்த நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவைச் சுற்றி வளைக்கும் நோக்கில் செயல்பட்டு வரும் சீனா, மாலை தீவுகளில் தனது காலடியை பதிப்பதற்காகவே இந்த வேலைகளைச் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக