இந்தியாவைவிட சீனாவில் முதலீடு செய்வது எளிதாக உள்ளதாக கூறியுள்ள பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா, இன்னும் விலகாத அரசு நிர்வாகத்தின் “சிகப்பு நாடா”முறையும்,அதை போக்க நடவடிக்கை எடுக்காத பிரதமர் மன்மோகன் சிங்கும் தங்களை வெளிநாடுகளை நோக்கி செல்ல வைப்பதாக சாடியுள்ளார். தொழில் நிறுவ்னங்கள் பெரிய திட்டங்களை தொடங்குவதற்கான அனுமதியை அரசிடம் பெறுவதில் பெரும் சிரமங்களை சந்திக்க வேண்டியதிருப்பதாக கூறியுள்ள ரத்தன் டாடா,அரசின் செயலற்றத்தன்மை காரணமாக இந்தியாவிற்கு வரும் முதலீடுகள் வேறு எங்கோ சென்று கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அரசின் ஆதரவு இல்லாத காரணத்தால்,இந்திய தொழில்துறையினரால்,சீனாவுடன் போட்டியிட முடியவில்லை என்றும்,திட்டங்களுக்கு அனுமதி வழங்குவதில் பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்படும் பழைய விதி முறைகளால்,முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்யப்படுவது தடுக்கப்படுவதாகவும் ரத்தன் டாடா அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அரசின் பல்வேறு துறைகளும்,ஒன்றுக்கொன்று முரணான கருத்துக்களை சொல்லிக்கொண்டிருப்பதாக குற்றம் சாட்டியுள்ள ரத்தன் டாடா, பிரதமர் அலுவலகம் ஒன்றை சொன்னால்,சம்பந்தப்பட்ட துறை அமைச்சரோ வேறு ஒரு கருத்தை சொல்வதாகவும்,பெரும்பாலான நாடுகளில் இதுபோன்று நடப்பதில்லை என்றும் கூறியுள்ளார்.
ஒரு இரும்பாலை அமைக்கும் திட்டத்திற்கான அரசின் அனுமதியை பெற ஏழு அல்லது எட்டு ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதாக உள்ளது என்று அதில் கூறியுள்ள ரத்தன் டாடா, தமது குழுமம் அதன் விரிவாக்க திட்டங்களுக்காக வேறு புதிய சந்தைகளை கண்டறிய திட்டமிட்டுள்ளதாகவும்,அரசு நிர்வாகத்தின் “சிகப்பு நாடா”தன்மை குறித்த புகார்களை தீர்க்க பிரதமர் மன்மோகன் சிங் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததாலேயே தமது குழுமம் இத்தகைய முடிவை எடுக்க தள்ளப்பட்டதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
பா .ஜ.-காங்கிரஸ்
ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு ஆவேசம் காட்டியுள்ள ரத்தன் டாடாவின் இந்த கருத்தை பா.ஜனதா வரவேற்றுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக