திங்கள், டிசம்பர் 10, 2012

அரசியலில் அடுத்த நிலைக்கு மோடி வளரவில்லை: சுஷில் குமார் ஷிண்டே !

குஜராத் மாநிலம், மஞ்சல்பூர் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி சுஷில் குமார் ஷிண்டே பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-  பிரதமர் பதவிக்கு பொருத்தமான, திறமையான நபர் ராகுல் காந்தி என்பதில் காங்கிரஸ் கட்சி தெளிவாக உள்ளது. எங்கள் கட்சியின் மூத்த தலைவர்களும், இளைய தலைவர்களும் அவரை பிரதமராக்க வேண்டும் என்று கூறி வருகின்றார்கள். ஆனால், பா.ஜ.க. சார்பில் 2014 பாராளுமன்ற தேர்லுக்கான பிரதமர் வேட்பாளர் யார்? என்பதில் இதுவரை தெளிவான, இறுதி கருத்து எட்டப்படவில்லை. 

அத்வானி, சுஷ்மா சுவராஜ், அருண்ஜெட்லி, ராஜ்நாத் சிங், நரேந்திர மோடி என்று பல பெயர்களை அவர்கள் கூறிக் கொண்டே போகின்றார்கள். 2003-ம் ஆண்டு மோடி குஜராத் முதல் மந்திரியாக இருந்தபோது, நான் மராட்டிய முதல் மந்திரியாக இருந்தேன். மோடி, இன்னும் முதல் மந்திரியாகவே இருக்கின்றார். நான் ஆந்திர மாநில கவர்னராகி, இப்போது மத்திய மந்திரியாக இருக்கின்றேன். மோடி அடுத்த நிலைக்கு நகரவில்லை.  

அரசியலில் அவர் வளரவில்லை என்பது தெளிவாகின்றது. மத்திய மின்தொகுப்பிலிருந்து தரும் மின்சாரத்தை விவசாயிகளுக்கு வழங்காமல், குஜராத் அரசு மின்சாரத்தை விற்று விடுகின்றது. தனது செல்வாக்கை உயர்த்திக்கொள்வதற்காக மோடி ஏகப்பட்ட பணத்தை செலவு செய்கின்றார். 

குஜராத் முன்னேறியிருப்பதாக கூறுவது உண்மை என்றால், இங்குள்ள வேலை வாய்ப்பகங்களில் 10 லட்சம் இளைஞர்கள் ஏன் பதிவு செய்து காத்துக கிடக்கின்றார்கள்? பாசனத் தேவைக்காக மின்சாரம் வேண்டி அரசாங்கத்தை அனுகிய 10 லட்சம் விவசாயிகளுக்கு மின்இணைப்பு வழங்க இந்த அரசு ஏன் காலம் தாழ்த்துகின்றது? 1995-ல் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது 2.15 லட்சம் அரசு ஊழியர்கள் வேலையில் இருந்தனர்.

மோடி முதல் மந்திரியாக பதவியேற்ற 11 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 1.60 லட்சமாக குறைந்து விட்டது. குஜராத் முன்னேறிவிட்டதாக மோடி பொய் பிரசாரம் செய்து வருகின்றார். இதை  குஜராத் மக்கள் புரிந்துக்கொண்டுள்ளனர். இந்த தேர்தலில் மோடியின் அரசு தோற்பது உறுதியாக விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக