போபால் - அப்சல் குருவிற்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதில் பாரதீய ஜனதா கட்சி இரட்டை வேடம் போடுவதாக திக் விஜய் சிங் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான திக்விஜய் சிங் இன்று மத்தியபிரதேசத்தில் உள்ள ரகோரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். ரகோர், திக்விஜய் சிங்கின் சொந்த நகரமாகும். அப்போது அவர் அப்சல்குரு பற்றி தனது கருத்துக்களை தெரிவித்தார். பாராளுமன்றத் தாக்குதலில் மரண தண்டனை பெற்ற குற்றவாளியான அப்சல் குருவிற்கு விரைவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என விரும்புவதாக குறிப்பிட்ட அவர், கருணை மனுவை உடனடியாக பரிசீலனை செய்து இதற்கான நடவடிக்கையை எடுக்கவேண்டும் எனத் தெரிவித்தார்.
பாரதீய ஜனதா இந்த விசயத்தில் இரட்டை வேடம் போடுவதாக அவர் தெரிவித்தார். அப்சல் குருவினை தூக்கில் போட வேண்டும் எனக் கோரும் பாரதீய ஜனதா, பஞ்சாப் தீவிரவாதிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனை குறைக்க வேண்டும் எனக் கேட்பது இரட்டை வேடம் என அவர் குறிப்பிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக