மதுரையில் என்றைக்கும் நாம் தான்;நம்மை மீறி யாரும் நடை போட முடியாது என்று மத்திய அமைச்சரும்,திமுக தென் மண்டல அமைப்பு செயலாளருமான மு.க. அழகிரி கூறியுள்ளார். மதுரை மாநகர் மாவட்ட திமுக பொருளாளரும், முன்னாள் துணை மேயருமான மிசா பாண்டியனின் மகன் மருது பாண்டியன்-ஆர்த்தி திருமணத்தை நடத்தி வைத்து, மு.க.அழகிரி பேசியதாவது:
"இன்று மணவிழா காணும் மருதுபாண்டியனின் தந்தை மிசா பாண்டியன் என்மீதும் கழகத்தின் மீதும் மிகுந்த பற்றும், பாசமும் கொண்டவர். அவரது இல்ல விழாவை நடத்தி வைப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். மணமகன் மருதுபாண்டியனும், எனது மகன் துரை தயாநிதியும் நெருங்கிய நண்பர்கள்.
துரைதயாநிதிக்கு ஒரு வழக்கில் இன்று முன் ஜாமீன் கிடைத்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை மணமகனுக்கு தெரிவித்தேன். அப்போது அவர் சந்தோசத்துடன் ஆனந்த கண்ணீர் வடித்தார். 1980-ல் முரசொலி பத்திரிகை பொறுப்பை ஏற்று நான் மதுரைக்கு வந்தேன். அப்போது இருந்தே மிசா பாண்டியன் என்னிடம் நம்பிக்கையுடனும், விசுவாசமாகவும் இருந்து வருகிறார்.
திமுக ஆட்சியில் இருந்த போது அதிகாரிகளும்,கட்சி நிர்வாகிகளும் என்னிடம் பதவிகளை கேட்டு பெற்றார்கள்.ஆட்சி மாறியவுடன் கட்சி நிர்வாகிகள் என்னை விட்டு விலகி சென்று விட்டனர்.அந்த துரோகத்தை பற்றி கவலைப் படவில்லை. திமுகவில் இருந்து நடிகர் திலகம் சிவாஜிகணேசன் விலகியபோது, எங்கிருந்தாலும் வாழ்க என்று அறிஞர் அண்ணா கூறினார்.அதனையே நானும் கூறுகிறேன்.
என்னை விட்டு விலகி சென்றவர்கள் எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும்.பணமும், பதவியும் முக்கியமில்லை.பணத்தை கொண்டு நிம்மதியாக வாழ முடியாது.துரோகிகள் எங்கு சென்றாலும் புகழ் கிடைக்காது.நாம் தேர்தலில் கடுமையாக உழைத்து வீடு, வீடாக சென்று ஓட்டுகளை பெற்று இப்படிப்பட்டவர்களை வெற்றி பெறச் செய்திருக்கிறோம். பதவியில் உட்கார வைத்தவுடன் அவர்கள் மாமனார்,மச்சான் மூலம் கிடைத்தது என்று சொல்லி திரிகிறார்கள்.
நமக்கு துரோகம் செய்தவர்களை பற்றி கவலைப்பட தேவையில்லை.அவர்கள் எங்கும் போகட்டும்.நம்மை விட்டு சென்றவர்கள் என்ன ஆனார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.நம்மால் பதவியும், பொருளாதார நிலையில் உயர்ந்தவர்களும் நம்மை விட்டு சென்ற துரோகத்தை பற்றி கவலைப்பட தேவையில்லை.
மதுரையில் என்றைக்கும் நாம் தான்.நம்மை மீறி யாரும் நடை போட முடியாது.நாம் பெற்று கொடுக்காத பதவியா? பட்டமா? நாம் தேர்தலில் உழைத்து வெற்றி பெற்றவர்கள். இது அனைவருக்கும் தெரியும்.அவர்களை இயற்கையே பார்த்து கொள்ளும். நம்மிடம் இருந்த போது ஜெயிக்க முடியாதவர்கள் நம்மை விட்டு சென்று ஜெயிக்க போகிறார்களா? அதை பொறுத்து இருந்து பார்ப்போம்"என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக