செவ்வாய், டிசம்பர் 11, 2012

உடல் நலக் குறைவு : நெல்சன் மண்டேலா மருத்துவமனையில் அனுமதி !

ஜோகன்னஸ்பர்க் : தென்னாப்ரிக்கா முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா(94) உடல் நலக் குறைவு காரணமாக பிரிட்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தென்னாப்ரிக்காவில் இனவெறியை எதிர்த்து போராடியதால் 27 ஆண்டுகளாக சிறையில் இருந்தவர் மண்டேலா. பின்னர், 1994ம் ஆண்டில் அவர் முதல் கருப்பர் இன அதிபரானார். 5 ஆண்டுகள் அவர் பதவி வகித்தார். இதன்பின், அவர் பொது வாழ்க்கையிலிருந்து விலகி தனது சொந்த கிராமமான குனுவுக்கு சென்று விட்டார். பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதையும் தவிர்த்து வந்தார். 2010ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி தென்னாப்ரிக்காவில் நடைபெற்றபோது தொடக்க விழாவில் அவர் கலந்து கொண்டார். இதுவே அவர் பங்கேற்ற கடைசி பொது நிகழ்ச்சியாகும்.

இந்நிலையில் மண்டேலாவுக்கு நேற்றுமுன்தினம் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர் பிரிட்டோரியாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதிபர் ஜேக்கப் ஜுமா நேற்று மண்டேலாவை மருத்துவமனைக்கு சென்று பார்த்தார். அதிபரின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், Ôமண்டேலாவின் உடல்நிலை சீராக உள்ளது. அவரை மருத்துவர்கள் சிறப்பாக கவனித்து வருகின்றனர்Õ என்றார். மண்டேலாவுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது, என்ன பரிசோதனைகள் செய்யப்பட்டன என்பதை அவர் தெரிவிக்க மறுத்து விட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக