சனி, டிசம்பர் 08, 2012

நாடாளுமன்றத்தில் அன்னிய முதலீடு மசோதா வெற்றி எப்படி? சுவாரஸ்யமான தகவல்கள்.

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு குறித்த மத்திய அரசின் நடவடிக்​கைக்கு, நாடாளுமன்றத்தில் வெற்றி கிடைத்துள்ளது. வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் தேவை என்று எதிர்க் கட்சியான பி.ஜே.பி-யும் இடது​
சாரிகளும் கோரிக்கைவைத்து அவைகளை முடக்கியதால், ஒரு வாரத்துக்குப் பின்னர் அதனை ஏற்றுக்கொண்டது மத்திய அரசு. இரண்டு நாட்கள் நடந்த விவாதத்துக்குப் பின்னர், கடந்த 5-ம் தேதி மக்களவையில் ஓட்டெடுப்பு நடந்தது. அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் உத்தரவை ரத்துசெய்யும் தீர்மானத்துக்கு ஆதரவாக 218 வாக்குகளும், எதிராக 253 வாக்குகளும் கிடைக்கவே ஆளும் அரசுக்கு வெற்றி. இந்த வெற்றிக்குக் காரணம், உ.பி-யில் எதிரும்புதிருமாக இருக்கும் சமாஜ்வாடிக் கட்சியும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும்தான். இந்த இரண்டு கட்சிகளும் சில்லறை வர்த்தகத்தில் 51 சதவிகிதம் அன்னிய முதலீடு அனுமதிக்கு எதிராகக் கடுமை​யாகப் பேசினாலும், கடைசி நிமிடத்தில் வெளிநடப்பு செய்து காங்கிரஸ் கட்சியைக் காப்பாற்றினார்கள்.  

இதே மாதிரியான வாக்கெடுப்பு மாநிலங்கள் அவையிலும் கடுமையாக விவாதங்களுடன் தொடங்கியது. விவாதம் தொடங்கியதுமே மாயாவதி தனது நிலைப்பாட்டைத் தெளிவாக அறிவித்துவிட்டார். மக்களவை மாதிரி வெளிநடப்பு செய்யாமல், மத்திய அரசுக்கு ஆதரவாக மாநிலங்​கள் அவையில் வாக்களிக்கப்போவதாக அறிவித்தார். அதனால் இங்கேயும் வெற்றி நிச்சயமாகிவிட்டது.
ஆளும் கட்சிக்கு ஆதரவாக மாயாவதி வாக்களிப்​பதற்கு ஒரு வகையில் சுஷ்மா ஸ்வராஜ்தான் காரணமாகிவிட்டார். அரசுக்கு ஆதரவாக வாக்​களிக்க வேண்டும் என்பதற்காகவே மாயாவதி மீது சி.பி.ஐ. மூலம் வழக்குத் தொடர்ந்து காங்கிரஸ் மிரட்டுகிறது என்று சுஷ்மா ஸ்வராஜ் சொல்லப் போக... ““சி.பி.ஐ-யை ஏவி வழக்குத் தொடர்ந்ததே பி.ஜே.பி-தான். அப்படிச் செய்துவிட்டு இப்போது பொய்யான தகவலை சுஷ்மா கூறுகிறார்”“ என்று கொந்தளித்தார் மாயாவதி.
எஃப்.டி.ஐ. விவகாரத்தில் தேசியக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பி.ஜே.பி-யின் நாடகங்களும் வெளிச்சத்துக்கு வந்தன. காங்கிரஸ் சொன்னவற்றை பி.ஜே.பி-யும், பி.ஜே.பி. மேற்கொண்ட முயற்சிகளை காங்கிரஸும் தோலுரித்துக் காட்டின. தான் எடுத்த நிலையில் இருந்து கடைசி வரை மாறாமல் உறுதியாக இருந்த ஒரே மாநிலக் கட்சி அ.தி.மு.க. மட்டும்தான்.
சீரியஸ் விவாதங்களுக்கு இடையே காங்கிரஸும் பி.ஜே.பி-யும் மோதிக்கொண்ட விவகாரத்தில் அதி சுவாரஸ்யம்.  பி.ஜே.பி. தலைவரான முரளி மனோகர் ஜோஷி, ““1996-ம் ஆண்டு நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம், எஃப்.டி.ஐ அனுமதிப்பது பற்றி பேசியபோது, “200 வருடங்கள் நாட்டைப் பிடித்து இருந்தவர்​களுக்கு இன்னும் 200 வருடங்கள் அவார்டு கொடுக்கமுடியாது” என்றார். இப்போது இந்த முடிவில் சிதம்பரம் உடந்தையாக இருக்கிறார்”“ என்று குற்றம் சாட்டினார்.
விவாதத்தைத் தொடக்கியும் முடித்துவைத்தும் பேசிய சுஷ்மா ஸ்வராஜின் பேச்சே சீரிய​ஸானது. ““மொத்தம் உள்ள 18 கட்சிகளில் 14 கட்சிகளைச் சேர்ந்த 22 நபர்கள் சில்லறை வர்த்தகத்தில் எஃப்.டி.ஐ. அனுமதிப்பதற்கு எதிராகப் பேசியுள்ளனர். லல்லு பிரசாத்தின் ஆர்.ஜே.டி. உட்பட நான்கு கட்சிகளே அரசுக்கு ஆதரவாக உள்ளன. அமைச்சர் கபில் சிபில்கூட இரண்டு மனதாகப் பேசினார். கடந்த ஆண்டு இதே குளிர்காலக் கூட்டத்தொடரின்போது, எஃப்.டி-யை அரசு கொண்டுவந்தபோது எதிர்க் கட்சிகள் மட்டுமல்ல... அமைச்சர் ஏ.கே.அந்தோணியும் எதிர்த்தார். அதனால், அனைத்துக் கட்சிகளிடமும் மாநில அரசுகளிடமும் ஒருமித்த கருத்து ஏற்படும் வரை, முடிவை நிறுத்திவைப்பதாக அவை முன்னவர் கூறினார். ஆனால், இந்த ஆண்டு குளிர்காலக் கூட்டத்தொடர் கூடுவதற்கு முன்பு, எதிர்க் கட்சிகளுக்கு ஒரு தொலைபேசி தகவல்கூட சொல்லாமல் திடீரென அறிவிக்கப்படுகிறது. நாங்கள் தொலைக்காட்சி மூலம்தான் அறிந்தோம். இது மோசமான விதிமீறல். கேட்டால், “முதலீடு​களை அனுமதிக்கும் விவகாரங்களில் எந்த மாநில அரசையும் கட்டாயப்படுத்தவில்லை. விருப்பப்​பட்டால் அவர்கள் அமல்படுத்தலாம். இல்லை என்றால், கைவிடலாம்” என்கின்றனர்.

இந்த எஃப்.டி.ஐ. கொண்டுவருவதற்கு நான்கு காரணங்கள் சொல்லப்படுகிறது. நுகர்வோர்களுக்குப் பலன் கிடைக்கும் என்கிறார்கள். சந்தையில் போட்டி இருந்தால்தான், நுகர்வோர்களுக்குப் பலன் கிடைக்கும் என்பது அடிப்படைத் தத்துவம். ஆனால், இந்த வெளிநாட்டு வர்த்தகர்கள் ஏகபோகத் தனி உரிமையாளர்களாக இருப்பார்கள். முதலில் விலையைக் குறைப்​பார்கள். பின்னர் மற்ற உள்ளூர் வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை இழந்ததும், போட்டி இல்லா​மல் போகும். பின்னர் இவர்​கள் வைத்ததுதான் விலை.
அடுத்து அரசு சொல்லுவது விவசாயிகளின் நன்மை. நேரடியாக விவசாயிகளிடம் இருந்து அதிக விலை கொடுத்து வாங்குவார்கள் என்கிறார்கள். இது உண்மை அல்ல. எல்லா பெரிய மற்றும் சில்லறை வர்த்தகர்களும் குறைவான விலைக்கே வாங்கி, தங்களிடம் பணியாற்றுபவர்களுக்குக் குறைவான ஊதியத்தைக் கொடுத்து, அதிக லாபத்தில் விற்பார்கள். அவர்களுடைய லாபத்தை ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள மாட்டார்கள். இதுதான் ஐரோப்பிய யூனியனில் நடந்தது.

மூன்றாவதாக, விவசாயிகளுக்குப் போய் சேரவேண்டிய லாபம் இடைத்தரகர்களால் பறிக்கப்படாமல், அவர்களுக்கே போய் சேரும் என்கிறார்கள். ஏற்கெனவே இந்தியாவில் கரும்பு உற்பத்தி செய்யும் விவசாயிகள் இடைத்தரகர்கள் இல்லாமல், நேரடியாகவே கரும்பு ஆலைகளில்தான் விற்கின்றனர். மிடில் மேன்கள் இருப்பது பருப்பு, தானிய வகைகளில்தான். அதற்குக் காரணம், கிராமப் பொருளாதாரம் தெரிந்தவர்களுக்குத்தான் தெரியும். விவசாயிகளின் பிள்ளைகளின் திருமணத்துக்குக் கடன் கொடுப்பார்கள். அப்படிக் கடன் கொடுப்பவர்கள்தான் இடைத்தரகர்கள் ஆனார்கள். ஆனால், வால்மார்ட்டும் டெஸ்கோவும் விவசாயிகளின் மகள் திருமணத்துக்குக் கடன் கொடுப்பார்களா? இப்போது இருக்கும் ஏஜென்டுகள் போய், இந்தப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு என்று புதிய ஏஜென்டுகள் வருவார்கள்.  
நான்காவதாக, வேலைவாய்ப்பை உருவாக்கும் என்கிறார்கள். அதுவும் 40 லட்சம் நபர்களுக்கு நேரடியாக வேலை கிடைக்கும் என்கிறார்கள். இந்த எண்ணிகையே ஒரு மோசடி. எங்கே இருந்து இந்தப் புள்ளிவிவரம் கிடைத்தது? உண்மையில் பலர் வேலையை இழக்க உள்ளனர். இந்த உத்தரவால் பல கம்பெனிகள் இழுத்துமூடக் காத்திருக்கிறது. முதலீடு செய்யவரும் அன்னிய நிறுவனங்கள் 30 சதவிகிதத்தை 

இந்தியாவில் உற்பத்தியாகும் பொருட்களையும், இந்திய நிறுவனங்களிடமும் வாங்க வேண்டும் என்று விதி இருப்பதாகச் சொல்கிறார்கள். அப்படி என்றால் மீதம் உள்ள 70 சதவிகிதத்தை எங்கே இருந்து கொண்டுவருவார்கள்? சீனாவில் இருந்துதான் இறக்குமதி செய்வார்கள். இந்தியாவில் எஃப்.டி.ஐ அனுமதித்தால், சீனாவில்தான் உற்பத்தியும் வருமானமும் அதிகரிக்கும். ஏற்கெனவே பெஃப்சிகோவும் மெக்டோனலிலும் விற்கப்படும் உருளைக்கிழங்கு சிப்ஸ் நீளமாக இருக்கிறது. அது இந்திய விவசாயிகளால் உற்பத்தி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு அல்ல. எங்கெல்லாம் எஃப்.டி.ஐ. வந்ததோ, அங்கெல்லாம் அழிவுதான் வந்துள்ளது. அமெரிக்கப் பொருளாதார வீழ்ச்சிக்கு வால்மார்ட்தான் காரணம். எங்களது ஆட்சியிலும் சிலர் இதற்கான ஆலோசனை கொடுத்தது உண்மைதான். ஆனால், நாங்கள் அதை ஸ்டடி செய்த பின்னர் நிராகரித்து​விட்டோம் என்பதே உண்மை. நாங்கள் சில்லறை வர்த்தகத்தில் மட்டுமே எதிர்க்கிறோமே தவிர, மின்சாரத்திலோ, பாலம் கட்டுவதிலோ, விமான நிலையம், துறைமுகம் கட்டுவதிலோ எஃப்.டி.ஐ. வருவதை தடுக்கவில்லை”“ என்று முடித்தார்.

அடுத்துப் பேசிய கபில் சிபில், ““2010-ம் ஆண்டு 22 ஆயிரம் மெட்ரிக் டன் உருளைக்கிழங்கை இந்திய விவசாயிகளிடம் வாங்கிய பெப்சி, 2012-ல் இதுவரை 69 ஆயிரம் மெட்ரிக் டன் உருளைக்கிழங்கைக் கொள்முதல் செய்துள்ளது. 2011-ல் 5,500 ஏக்கரில் விளைச்சல் செய்யப்பட்ட உருளைக்கிழங்கு இப்போது 7,000 ஏக்கர் வரை அதிகரித்துள்ளது. அதனால் விவசாயிகள் நல்ல விலையைப் பெற்றுள்​ளனர்”“ என்று புள்ளிவிவரங்களைச் சொல்லி சுஷ்மாவின் வாயை அடைத்தார்.

விவாதம் என்பது விரிவாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது என்றாலும், அதனால் எந்தப் பலனும் ஏற்படவில்லை என்பதுதான் கசப்பான நிஜம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக