கடந்த 2010-ம் ஆண்டில் இருந்து சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக எம்.ஒய்.இக்பால் பணியாற்றி வருகிறார். சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீரின் தலைமையில் 5 நீதிபதிகளைக் கொண்ட குழு கடந்த மாதம் பரிந்துரைத்தது. அந்த பரிந்துரை கடிதம், மத்திய சட்டத்துறைக்கு அனுப்பப்பட்டு, ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டது. இதனை பரிசீலனை செய்த ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருக்கும் இக்பால், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பதவி உயர்வு பெறுவதற்கான உத்தரவை இன்று பிறப்பித்தார்.
இதையடுத்து இக்பால் விரைவில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பொறுப்பேற்கிறார். அவருக்குப் பதிலாக சென்னை ஐகோர்ட்டு தற்காலிக தலைமை நீதிபதியாக தர்மாராவ் பொறுப்பேற்கிறார். ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்தவர் எம்.ஒய்.இக்பால். இவர் 13.2.1951 அன்று பிறந்தார். 1975-ம் ஆண்டு வக்கீலாக பதிவு செய்தார். சட்டக்கல்வியில் தங்கப்பதக்கம் பெற்றவர் இவர்.
பாட்னா ஐகோர்ட்டின் ராஞ்சி கிளையில் 1990-ம் ஆண்டு அரசு பிளீடராக பணியாற்றினார். 1996-ம் ஆண்டு மே 9-ந் தேதி பாட்னா ஐகோர்ட்டின் நிரந்தர நீதிபதியாக எம்.ஒய்.இக்பால் பதவி ஏற்றார். 2000-ம் ஆண்டு நவம்பர் 14-ந் தேதி ஜார்க்கண்ட் ஐகோர்டின் நீதிபதியானார். அதைத் தொடர்ந்து, சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக கடந்த 11.6.2010 அன்று பதவி ஏற்றார்.
நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு நீர் கலப்பதை தடுக்கும் விதத்தில் திருப்பூர் பகுதியில் உள்ள சாயப்பட்டறைகளை மூடுவதற்காக பிறப்பித்த உத்தரவு, சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்துவதற்காக பிறப்பித்த உத்தரவு, சென்னையில் விதிமீறி கட்டப்பட்ட கட்டிடங்களை முறைப்படுத்தி பிறப்பித்த உத்தரவு உள்பட அவரால் பிறப்பிக்கப்பட்ட பல தீர்ப்புகள், தமிழகத்தில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக