சனி, டிசம்பர் 22, 2012

ஆயுள் தண்டனை விதிக்க வாதிடுவோம்: ஆர்.கே. சிங் !

"தில்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கும்படி நீதிமன்றத்தில் மத்திய அரசு மற்றும் தில்லி காவல் துறை சார்பில் வாதிடப்படும்' என்று மத்திய உள்துறைச் செயலர் ஆர்.கே. சிங் கூறினார். தில்லி மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று பல தரப்பிலும் வலியுறுத்தப்பட்டுவரும் நிலையில்,
அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கும்படி வாதிடுவோம் என்று ஆர்.கே. சிங் கூறியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
அந்த சம்பவத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆர்.கே. சிங்கிடம் தில்லி காவல் துறை ஆணையர் நீரஜ் குமார் வெள்ளிக்கிழமை நேரில் விளக்கம் அளித்தார்.
6-வது நபர் கைது: இதனிடையே தில்லி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்டு வந்த ஆறாவது நபர் அக்ஷய் தாகுர், பிகார் மாநிலம் ஒளரங்காபாதில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
"இந்த சம்பவத்தில் பேருந்து ஓட்டுநர் ராம் சிங், அவரது நண்பர்கள் வினய் சர்மா, பவன் குப்தா ஆகியோர் தில்லியிலும், ராம் சிங்கின் சகோதரர் முகேஷ் சிங் ராஜஸ்தானிலும் கைது செய்யப்பட்டனர்.
ராஜு என்ற 5-வது நபர் கடந்த வியாழக்கிழமை இரவு உத்தரப் பிரதேச மாநிலம் பதௌன் பகுதியில் பிடிபட்டார். ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள நான்கு பேர் முன்னிலையில், அவர்கள் இருவரும் விசாரிக்கப்படுவர்' என்று அதிகாரி ஒருவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக