திங்கள், டிசம்பர் 03, 2012

குவைத் தேர்தலில் ஷியா முஸ்லிம்களுக்கு முன்னேற்றம் !

15-வது பாராளுமன்ற கமிட்டியை தேர்ந்தெடுப்பதற்கான குவைத்தில் நேற்று முன் தினம் நடந்த தேர்தலில் சிறுபான்மையினரான ஷியா முஸ்லிம்கள் கணிசமான தொகுதிகளில் வெற்றியை பெற்றுள்ளனர். மொத்தம் 50 தொகுதிகளில் 17 தொகுதிகளை ஷியா முஸ்லிம்கள் கைப்பற்றியுள்ளனர். இது மொத்த
இடங்களில் மூன்றில் ஒரு பகுதியாகும். முதன் முதலாக 12 லட்சம் மக்கள் தொகையை கொண்ட குவைத்தில் மூன்றில் ஒரு பகுதியான ஷியாக்கள் தங்களது ஆதிக்கத்தை நிலை நாட்டியுள்ளனர்.
அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் அல் சபாவின் தேர்தல் சீர்திருத்தங்களைக் குறித்து கேள்வி எழுப்பி இஸ்லாமியவாதிகளான எதிர்கட்சியினர் தேர்தலை புறக்கணித்தனர். 26.7  சதவீத வாக்குகள் மட்டுமே காலை முதல் மாலை வரை நடந்த வாக்கெடுப்பில் பதிவானது. ஆனால், அதிகாரப்பூர்வ புள்ளிவிபரப்படி வாக்குப்பதிவு 38 சதவீதம் ஆகும்.
பாராளுமன்றத்திற்கு 3 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கடந்த முறை நான்கு பெண்கள் வெற்றிப் பெற்றனர். 23 சன்னி முஸ்லிம் பிரதிநிதிகள் கடந்த முறை இடம் பெற்றிருந்தனர். ஆனால், இம்முறை நான்கு பேர் மட்டுமே வெற்றிப் பெற்றுள்ளனர். தேர்தல் முடிவுகளை சட்டவிரோதம் என்று அறிவிக்க வேண்டும் என்றும், புதிய பாராளுமன்றம் நாட்டின் பெரும்பான்மை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்றும் மூத்த எதிர்கட்சி தலைவர் அஹ்மத் அல் ஸாதுன் கூறியுள்ளார்.
ஐந்து மண்டலங்களில் 308 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஒவ்வொரு மண்டலத்திலும் அதிக வாக்குகளைப் பெறும் 10 பேர் பாராளுமன்ற உறுப்பினராக தகுதி பெறுவர். இவ்வாண்டு நடைபெறும் 2-வது தேர்தலாகும் இது. பிப்ரவரி மாதம் அமலுக்கு வந்த அரசுக்கும், சட்ட உருவாக்க அவைக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து அமீர், பாராளுமன்றத்தை கலைத்தார். 50 இடங்களில் 35 இடங்களைப் பெற்றிருந்த எதிர்கட்சியினரின் கட்டுப்பாட்டில் பாராளுமன்றம் இருந்தது. பாராளுமன்றத்தை கலைத்த பிறகு ஒரு தலைபட்சமாக தேர்தல் சட்டத்தை திருத்தினார் என்று குற்றம் சாட்டி எதிர்கட்சியினர் பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
250 ஆண்டுகளுக்கும் மேலாக குவைத்தை ஆளும் அல் ஸபாஹ் குடும்பத்தினருடன் எதிர்கட்சியினரும், தாராள மதசார்பற்ற வாதிகளும் மோதல் போக்கை கையாண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக