திங்கள், டிசம்பர் 03, 2012

ஃபலஸ்தீனுக்கான வரிப்பணம் முடக்கம்! தொடரும் இஸ்ரேலின் பழிவாங்கும் நடவடிக்கை !

ஃபலஸ்தீனுக்கு ஐக்கிய நாடுகள் அவையில் பார்வையாளர் அங்கீகாரம் கிடைத்ததால் ஆத்திரமடைந்துள்ள ஆக்கிரமிப்பு இஸ்ரேல், அந்நாட்டிற்கான 12 கோடி டாலர் வரிப் பணத்தை முடக்கியுள்ளது. இஸ்ரேல் எலக்ட்ரிக் கார்ப்பரேசனுக்கு ஃபலஸ்தீனர்கள் அடைக்கவேண்டிய கடன் தொகையை இத்தொகை மூலம் அடைக்கப்படும் என்று
இஸ்ரேல் நிதியமைச்சர் யுவல் ஸ்டினிட்ஸ் கூறியுள்ளார். ஃபலஸ்தீன் ஆணையத்திற்கு இம்மாதம் வரிப்பணத்தை ஒப்படைக்கும் எண்ணம் இல்லை என்று அவர் கூறினார். ஐக்கிய நாடுகள் அவையில் ஃபலஸ்தீன் பெற்ற சரித்திர வெற்றியில் அரண்டு போன இஸ்ரேல், மேற்கு கரையில் யூதர்களுக்காக மேலும் 3 ஆயிரம் வீடுகளை கட்டப்போவதாக நேற்று முன்தினம் அறிவித்திருந்தது. அதற்கு அடுத்து வரிப்பணத்தை முடக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஃபலஸ்தீனுக்கான பதவியை உயர்த்திய ஐ.நா அவை வாக்கெடுப்பை ஞாயிற்றுக் கிழமை கூடிய இஸ்ரேலிய அமைச்சரவை நிராகரித்தது. ஃபலஸ்தீன் ஆணையத்துடன் நடக்கும் எதிர்கால பேச்சுவார்த்தைகளின் அடிப்படை ஐ.நா தீர்மானமாக இருக்காது என்றும், அமைதிக்கான தீர்வுக்கு இது உதவாது என்றும் இஸ்ரேல் அமைச்சரவை தெரிவித்துள்ளது.
ஃபலஸ்தீனுக்கான நிதியை முடக்கியதில் ஆச்சரியமில்லை. ஃபலஸ்தீனுக்கு ஐ.நாவில் உயர்ந்த பதவியை அளித்தால் கடுமையான நடவடிக்கை எடுப்போம் என்று ஃபலஸ்தீனுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் இஸ்ரேல் ஏற்கனவே மிரட்டல் விடுத்திருந்தது.
ஃபலஸ்தீனுக்கு கிடைத்த உயர் பதவி கொந்தளிப்பை ஏற்படுத்தக் கூடியது என்று இஸ்ரேல் நிதியமைச்சர் ஸ்னிட்ஸ் புலம்புகிறார். ஒரு தலைபட்சமான முயற்சியை ஃபலஸ்தீனர்கள் தொடர்ந்தால் அவர் நட்புறவு ஒத்துழைப்பை எதிர்பார்க்கவேண்டாம். மேலும் 12 கோடி அமெரிக்க டாலர் வரிப்பணத்தை தடுத்து வைப்போம் என்று ஸ்னிட்ஸ் மிரட்டல் விடுத்துள்ளார்.
ஃபலஸ்தீன் சந்தைகளுக்கு இஸ்ரேல் துறைமுகம் மூலம் கொண்டு செல்லும் பொருட்களுக்கு கஸ்டம்ஸ் தீர்வை கையில் செலுத்தும் லட்சக்கணக்கான டாலர் தொகையை எல்லா மாதமும் ஃபலஸ்தீன் ஆணையத்திடம் அளிக்கப்பட்டு வருகிறது. இத்தொகை மூலம் தான் ஃபலஸ்தீன் ஆணையம் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கிறது. ஃபலஸ்தீன் ஆணையத்திற்கும், இஸ்ரேலுக்கும் இடையேயான தூதரக மோதல்களின் போது வரிப்பணத்தை இஸ்ரேல் தடுத்து வைப்பதுண்டு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக