திங்கள், டிசம்பர் 03, 2012

செம்மரக் கடத்தல்...இனி என்கவுன்ட்டர்தான்: தமிழகத்தவருக்கு ஆந்திரா போலீஸ் எச்சரிக்கை !

திருப்பதி: திருப்பதி வனப்பகுதியில் செம்மரக் கட்டைகளை கடத்துவதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களே ஈடுபடுவதாகவும் இது தொடர்ந்தால் அவர்கள் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்படுவர் என்றும் ஆந்திர மாநில போலீஸ் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. திருப்பதி மலைப்பகுதியில் ஏராளமான செம்மரங்கள் இருக்கின்றன. இவற்றை வெட்டிக் கடத்தி சென்னை வழியாக வெளிநாடுகளுக்கு
சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்யும் தொழில் சென்னை புறநகரில் கொடிகட்டிப் பறக்கிறது. இந்நிலையில் திருப்பதி வனப்பகுதியில் சனிக்கிழமை இரவு செம்மரக் கட்டைகளை கடத்த முயன்ற கும்பல் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கின்றனர். இதில் விழுப்புரம் மாவட்டம் உப்பூரைச் சேர்ந்த முருகேசன் என்பவர் உயிரிழந்தார். மற்றொரு தமிழரான பாக்கியராஜ் படுகாயமடைந்தார்.
இந்த சம்பவம் நடந்த இடத்தை சித்தூர் எஸ்.பி. கிரான்சி ராணா டாடா நேற்று பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் சமீப காலமாக செம்மரக் கட்டைகளை கடத்தி வருகின்றனர். தமிழகத்தின் திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இதில் ஈடுபடுகின்றனர். செம்மரைக் கட்டைகளைத்தான் கடத்துகிறோம் என்று தெரியாமலேயே தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் இதில் ஈடுபட்டு ஆந்திர சிறையில் இருக்கின்றனர். இனியும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இத்தகைய கடத்தலில் ஈடுபட்டால் இனி என்கவுன்ட்டர்தான் என்றார் அவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக