சனி, டிசம்பர் 15, 2012

எதிர்காலத்தில் ஏவுகணைகளை செலுத்துவோம்: வடகொரிய அதிபர்

ஆராய்ச்சிக்காக எதிர்காலத்தில் பல ஏவுகணைகளை செலுத்தவுள்ளோம் என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங்-உன் தெரிவித்துள்ளார். ஐ.நா.வின் எதிர்ப்பையும் மீறி கடந்த புதன்கிழமை நீண்ட தொலைவு இலக்கை தாக்கக்கூடிய ஏவுகணையை வெற்றிகரமாக வடகொரியா செலுத்தியது. இதைக் கொண்டாடும் வகையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள், வடகொரியத் தலைநகர்
பியாங்யாங்கில் வெள்ளிக்கிழமை பேரணி நடத்தினர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கிம் இல்-சங் சதுக்கத்தில் ஒன்று கூடி, கிம் ஜாங்-உன்னின் தைரியத்தை பாராட்டினர்.
""நாட்டின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக எதிர்காலத்தில் பல ஏவுகணைகளை செலுத்துவோம்'' என்று கிம் ஜாங்-உன் கூறியதாக கொரியன் மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
3 நிலைகள் கொண்ட இந்த ஏவுகணை, செயற்கைக்கோளை சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்துவதற்காகத்தான் அனுப்பப்பட்டதாக வடகொரியா தெரிவித்தது.
எனினும் இதற்கு தென்கொரியா, ஜப்பான், சீனா, அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.
ராக்கெட் பாகங்களை தென் கொரியா கைப்பற்றியது: வடகொரியா செலுத்திய ராக்கெட்டின் முதல்நிலை பாகங்களை தென்கொரிய கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
"கைப்பற்றப்பட்ட பாகங்களின் தன்மை குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொள்ள உள்ளனர். இந்த பாகங்களின்மூலம் வடகொரிய ராக்கெட்டின் திறனைக் கண்டறிய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது' என்று தென்கொரியா பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கிம் மின்-சியோக் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
3 நிலைகள் கொண்ட வடகொரிய ஏவுகணையின் முதல் நிலை பாகங்கள் கொரியன் தீபகற்பப் பகுதியிலும், 2ஆம் நிலை பாகங்கள் பிலிப்பின்ஸின் கிழக்குப் பகுதியிலும் விழுந்ததாக யோஹ்னா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக