சனி, டிசம்பர் 15, 2012

இனி காவிரி படுகை அம்பானி கையில் !

காவிரியில் தமிழகத்தின் பங்கை தர மறுத்து அடாவடி செய்யும் கர்நாடகாவையும் அதற்கு துணை போகும் மத்திய அரசையும் கண்டிக்கும் தமிழின ஆர்வலர்கள் காவிரி படுகையை கொள்ளையடிக்கும் ரிலையன்சை குறி வைத்தும் எதிர்ப்பார்களா? லைக்காவிரி கர்நாடாக கையில் சிக்கிவிட்டதைப் போல காவிரியின் படுகை அம்பானி கையில் போய்விட்டது.
காவிரி-பாலாறு படுகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள எண்ணெய்-எரிவாயு இருப்பை மதிப்பிடும் பணியை பெட்ரோலிய அமைச்சகம் ரிலையன்சிடம் கொடுத்திருக்கிறது.

இது தொடர்பான ஒப்புதல் கடிதத்தை பெட்ரோலிய அமைச்சகம் சென்ற வெள்ளிக் கிழமை (டிசம்பர் 7, 2012) ரிலையன்ஸூக்கு அனுப்பியிருக்கிறது. இதைத் தொடர்ந்து ரிலையன்ஸ் காவிரி பாலாறு படுகையில் எண்ணெய் கண்டுபிடிப்பை மதிப்பிட்டு, உற்பத்திக்கு கொண்டு வருவதற்கான திட்டத்தை சமர்ப்பிக்கும்.
8,600 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான இந்த எண்ணெய் வளப் பகுதி 2003ம் ஆண்டு அப்போதைய பாஜக அரசினால் ரிலையன்சுக்கு குத்தகை விடப்பட்டது. ரிலையன்சின் கூட்டு நிறுவனம் பிரிட்டிஷ் பெட்ரோலியம் இந்த முயற்சியில் 30 சதவீத பங்குகளை வைத்திருக்கிறது.
காவிரி-பாலாறு படுகையில் 100 பில்லியன் பேரல்கள் இலகு ரக கச்ச எண்ணெயும் 3 டிரில்லியன் கனஅடி இயற்கை எரிவாயுவும் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2011ம் ஆண்டு ஏப்ரல் 21 அன்று ரிலையன்ஸ் இந்தக்  கண்டுபிடிப்பை அறிவித்தது.
ஏற்கனவே தன் பொறுப்பில் விடப்பட்ட கிருஷ்ணா கோதாவரி படுகையில் இயற்கை எரிவாயு உற்பத்தியை முடக்கி, ஒரு நாளைக்கு திட்டமிட்ட உற்பத்தியான 8 கோடி கனமீட்டருக்குப் பதிலாக இப்போது 2.3 கோடி கனமீட்டர் மட்டும் உற்பத்தி செய்கிறது ரிலையன்ஸ். இதன் மூலம் 12,000 மெகாவாட் மின் உற்பத்தி இழப்பும், இரசாயன உர உற்பத்தி தடையும் ஏற்பட்டுள்ளன. 2010ல் 6.2 கோடி கனமீட்டர் வாயு உற்பத்தி செய்யப்பட்டது.
கிருஷ்ணா கோதாவரி படுகையில் எரிவாயு உற்பத்திக்கான மூலதனச் செலவை இரண்டு மடங்காக்கி, எரிவாயுவின் விற்பனை விலையை யூனிட்டுக்கு ரூ 124லிருந்து ரூ 226க்கு உயர்த்திக் கொண்டது ரிலையன்ஸ். இதன் மூலம் ரிலையன்ஸூக்கு ரூ 30,000 கோடி லாபமும், தேசிய அனல் மின் கழகத்துக்கு ரூ 24,000 கோடி நஷ்டமும் ஏற்பட்டன.
இப்போது விலையை ரூ 756ஆக உயர்த்த வேண்டும் என்று அடாவடி செய்து வருகிறது. இல்லா விடில் 2013ல் உற்பத்தி 1.8 கோடி கனமீட்டராக குறைந்து விடும் என்று மிரட்டியிருக்கிறது.
2011-12ல் எரிவாயு உற்பத்தி குறைவுக்காக ரிலையன்ஸை கண்டித்து $1 பில்லியன் (சுமார் ரூ 5,500 கோடி) அபராதம் விதித்த அப்போதைய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டியை மாற்றி விட்டு  வீரப்ப மொய்லியை அமைச்சராக்கினார் மன்மோகன் சிங். 2012-13 நிதியாண்டில் $1.72  பில்லியனும், 2013-14ல் $2.1 பில்லியனும் அபராதம் விதிக்க வேண்டும் என்று ஜெய்பால் ரெட்டி பரிந்துரைத்திருந்தார்.
இப்போது ரிலையன்ஸ்-பிரிட்டிஷ் பெட்ரோலியம் கூட்டாளிகள் கொள்ளையடிப்பதற்கு மேலும் வாய்ப்புகளை வழங்க ஆரம்பித்திருக்கிறது வீரப்ப மொய்லி தலைமையிலான பெட்ரோலிய அமைச்சகம். ரிலையன்ஸ் ஆண்டைகளுக்கு சேவை செய்வதற்காக தனக்கு அளிக்கப்பட்ட பணியை பெட்ரோலிய அமைச்சகம் செவ்வனே நிறைவேற்றுகிறது.
காவிரியில் தமிழகத்தின் பங்கை தர மறுத்து அடாவடி செய்யும் கர்நாடகாவையும் அதற்கு துணை போகும் மத்திய அரசையும் கண்டிக்கும் தமிழின ஆர்வலர்கள் காவிரி படுகையை கொள்ளையடிக்கும் ரிலையன்சை குறி வைத்தும் எதிர்ப்பார்களா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக