திங்கள், டிசம்பர் 10, 2012

'பவர் கட்'டுக்கு நடுவே சமையல்... சாம்பாரில் மிதந்த பாம்பு...ஷாக்கில் நிலைகுலைந்த பெண்!

சென்னை: சென்னை அருகே மின்சாரத் தடை காரணமாக இருட்டில் சமையல் செய்தார் ஒரு பெண். சாம்பாரை வைத்து அடுப்பிலிருந்து பாத்திரத்தை இறக்கி வீட்டாருக்கு சாப்பாடு பரிமாறினார். அடுத்த நாள் காலையில் சாம்பார் இருந்த பாத்திரத்தைப் பார்த்தபோது, அதில், பாம்பின் எலும்புக் கூட கிடந்ததைப் அதிர்ச்சி அடைந்து மயங்கி விழுந்தவர் இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து தெளியாமல் பித்துப் பிடித்தவர் போல காணப்படுகிறார்.

சென்னை அகருகே வடக்குப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் மங்கம்மாள். 47 வயதான இவர் டிசம்பர் 4ம் தேதி மாலை 7 மணியளவில் சமையல் செய்துள்ளார். அப்போது மின்சாரம் இல்லை. 2 மணி நேர மின்வெட்டு என்பதால் இருட்டிலேயே சமையல் செய்து முடித்தார். சாதம் வைத்து, சாம்பார் வைத்தார். பின்னர் இரவில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் சாப்பாடு பரிமாறினார். வீட்டாரும் சாப்பிட்டு முடித்தனர்.
அடுத்த நாள் காலை எழுந்த மங்கம்மாள் பாத்திரங்களைக் கழுவ உட்கார்ந்தார். அப்போது சாம்பார் பாத்திரத்தை எடுத்த அவர் அதில் நீளமான ஒரு எலும்புக் கூடு கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதை வெளியில் எடுத்துப் பார்த்தபோது அது பாம்பின் உடல் என்று தெரிய வந்தது.
தகவல் தெரிந்து அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து விட்டனர். அவர்களில் சிலர் இது நல்ல பாம்பின் எலும்புக் கூடு என்று கூறவே மங்கம்மாள் பெரும் அதிர்ச்சி அடைந்து மயங்கி விழுந்து விட்டார். உடனடியாக அவரை டாக்டரிடம் கூட்டிச் சென்றனர். அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், அவருக்கு பாம்பின் விஷம் ஏறியிருக்கலாம் என்று கூறவே உடனடியாக திருத்தணியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்குப் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவரது உடலில் பாம்பு விஷம் ஏறவில்லை என்பது தெரிய வந்தது. இருப்பினும் தொடர்ந்து வாந்தி எடுத்தபடியும், மயங்கிய நிலையிலும் இருந்தார் மங்கம்மாள். இதையடுத்து அவரை சென்னை அரசு பொது மருத்துவமனைக்குக் கூட்டி வந்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், பாம்பு விஷம் அவரைத் தாக்கவில்லை, மாறாக புட் பாய்சன் ஆகியுள்ளது என்று கூறி அதற்குச் சிகிச்சை அளித்தனர்.
ஆனாலும் மங்கம்மாளின் பயம் இன்னும் போகவில்லை. பாம்பை நினைத்து பித்துப் பிடித்தவர் போலவே காணப்படுகிறார். மங்கம்மாள் ஏற்கனவே காது கேளாத பெண்மணி ஆவார். தற்போது பாம்பைச் சமைத்து சாப்பிட்டு விட்டதால் அந்த பயம் அவரை கடுமையாக பாதித்துள்ளதாக டாக்டர்கள் கூறுகின்றனர். அவருக்கு பயம் தெளியாவிட்டால் மன நல மருத்துவப் பரிசோதனைக்கு அவரை அனுப்பி வைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக