இடிந்தகரை: கூடங்குளம் அணுமின் நிலையத்தை கடல்வழியாக முற்றுகையிடுவதற்காக போராட்டக் குழுவினர் படகுகளுடன் இடிந்தகரையில் இருந்து புறப்பட்டுச் சென்றனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அணுமின் நிலையத்தை போராட்டக்குழுவினர் நெருங்காதபடி அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அணுஉலையை மூட வலியுறுத்தி இன்று கடல்வழியாக
மீண்டும் அணுஉலையை முற்றுகையிடப்போவதாக கடந்த சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது..
கூடங்குளத்தில் முற்றுகைப் போராட்டம் நடைபெறும் அதேநேரத்தில், தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் சாலை மறியலில் ஈடுபடப்போவதாக அணுசக்திக்கு எதிரான அமைப்பினர் அறிவித்துள்ளனர். பல்வேறு அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் இந்த போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இப்போராட்ட அறிவிப்பையடுத்து கூடங்குளம் பகுதியில் 2000 போலீசார் குவிக்கப்பட்டிருக்கின்றனர். பிற தென் மாவட்டங்களிலிருந்தும் போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருக்கின்றனர். இதுதவிர, அணுமின் நிலையத்தை சுற்றி, மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரும் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். போராட்டக்காரர்கள் அணு உலைக்குள் சென்றுவிடாதவாறு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
இந்நிலையில் இன்று காலை 10 மணியளவில் இடிந்தகரை கிராமத்தில் இருந்து நூற்றுக்கணக்கான படகுகளுடன் கடல் வழியே அணு மின்நிலையத்தை முற்றுகையிட போராட்டக் குழுவினர் புறப்பட்டுச் சென்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக