புதுடெல்லி:குடியரசு நாடு தனது சொந்த குடிமக்களை கொலைச் செய்யக்கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் தொடரும் அறிவுறுத்தல்களை போலீசும், பாதுகாப்பு படையினரும் புறக்கணித்து வருகின்றனர் என்பதன் ஆதாரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில் என்கவுண்டர் படுகொலைகளில் 191 கொலைகள் போலி
என்கவுண்டர் என்று தேசிய மனித உரிமை ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் கூறியுள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் மணிப்பூர் மாநிலத்தில் 1500க்கும் மேற்பட்ட போலி என்கவுண்டர்கள் நடந்துள்ளதாக குற்றம் சாட்டி கொலைச் செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தனர். இவ்வழக்கு தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் தான் மேற்கண்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2007-ஆம் ஆண்டு முதல் 2012 -ஆம் ஆண்டு வரை போலி என்கவுண்டர் படுகொலைகள் தொடர்பாக 1671 புகார்கள் கிடைத்துள்ளதாகவும் தேசிய மனித உரிமை ஆணையம் தனது பிரமாணப்பத்திரத்தில் சுட்டிக்காட்டுகிறது. ஆனால், மாநிலங்களில் இருந்து கிடைக்கவேண்டிய மாஜிஸ்ட்ரேட் விசாரணை அறிக்கை, பிரேத பரிசோதனை அறிக்கை, இன்க்வெஸ்ட் அறிக்கை, பாலிஸ்டிக் எக்ஸ்பெர்ட் அறிக்கை ஆகியன உரிய நேரத்தில் கிடைக்காததால் என்கவுண்டர்கள் போலியானதா? என்பதை பரிசோதிக்க இயலவில்லை என்று மனித உரிமை ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
குஜராத்தில் நடந்த இரண்டு போலி என்கவுண்டர்களை குறித்து விசாரணை நடத்தியபொழுது சந்தித்த சவால்களை ஆணையம் தனியாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. என்கவுண்டர் போலி என்று நிரூபணமானால் 5 முதல் 10 லட்சம் வரையிலான இழப்பீட்டு தொகை வழங்கப்படவேண்டும். இவ்வகையில் 191 வழக்குகளில் 10.51 கோடி ரூபாய் இழப்பீடாக இதுவரை வழங்கப்பட்டுள்ளது என்று ஆணையம் பிரமாணப்பத்திரத்தில் கூறியுள்ளது. இவ்வழக்கை இன்று மீண்டும் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும்.
முன்னர் மணிப்பூரில் இருந்து தொடரப்பட்ட வழக்கை ஃபயலில் ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், விளக்கம் கேட்டு மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், பதில் அளிக்க மாநில அரசு தாமதித்தது. அதுமட்டுமல்ல, போலீஸ்-துணை ராணுவப்படையினருக்கு ஆதரவான நிலைப்பாட்டை மாநில அரசு எடுத்துள்ளது. மனித உரிமைகளுடன் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசின் தன்னம்பிக்கையை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும் நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று அரசு வாதிட்டது. இந்த பதிலால் அதிருப்தியடைந்த நீதிமன்றம், மாநில அரசு மீது கடுமையான விமர்சனங்களை தெரிவித்தது. நாட்டில் போர் நடக்கிறதா? என்றும் மணிப்பூர் போரில் ஈடுபட்டுள்ளதா? எனவும் நீதிபதிகளான அஃப்தாப் ஆலம், ரஞ்சனபிரகாஷ் தேசாய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் கேள்வி எழுப்பியது.
போலி என்கவுண்டர் படுகொலைகள் தொடர்ந்து அரங்கேறும் குஜராத், மஹராஷ்ட்ரா மாநிலங்களில் அம்மாநில அரசுகள் பல ஆண்டுகளாக கையாளும் அதே நிலைப்பாட்டைத்தான் இவ்விஷயத்திலும் மணிப்பூர் அரசும் கையாளுகிறது என்று மனுதாரர்கள் சுட்டிக்காட்டினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக