புதுடெல்லி:சேது கால்வாய் கப்பல் போக்குவரத்து திட்டம் செயல்படுத்தும் பகுதியில் ராமர் பாலம் இருப்பதாக கூறும் புராணக் கதையை மையமாகக் கொண்டு ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணிய சுவாமி தாக்கல் செய்த மனுமீதான விசாரணையில் மத்திய அரசு தனது முடிவை அறிவிக்க மேலும் 2 வார கால அவகாசத்தை உச்சநீதிமன்றம் அளித்துள்ளது.
சுப்ரமணிய சுவாமியின் மனு மீதான விசாரணை கடந்த செவ்வாய்க்கிழமை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற போது, மத்திய அரசின் நிலையை பிரமாணப் பத்திரமாகத் தாக்கல் செய்ய இரண்டு நாள்கள் கெடு விதிக்கப்பட்டது.
சேது கால்வாய்த் திட்டத்தை மாற்று வழித் தடத்தில் செயல்படுத்தும் சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து வரும் ஆர்.கே. பச்சௌரி குழுவின் அறிக்கையை ஆறு வாரங்களுக்குள் தாக்கல் செய்யவும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தவிட்டது.
இந்த நிலையில், சுப்பிரமணியன் சுவாமியின் மனு மீதான விசாரணை, நீதிபதிகள் எச்.எல்.தத்தூ, அனில் ஆர்.தவே முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிஸிட்டர் ஜெனரல் ஹரேன் ராவல், “ராமர் பாலம் தொடர்பாக மேலும் சில துறைகளுடன் ஆலோசனை நடத்த வேண்டியுள்ளது. அதனால் நீதிமன்றம் அளித்த இரண்டு நாள்கள் அவகாசம் போதவில்லை. கூடுதலாக இரண்டு வாரங்கள் அவகாசம் அளிக்க வேண்டும்” என்று கோரினார்.
அப்போது மனுதாரர் சுப்பிரமணியன் சுவாமி நீதிமன்றத்தில் இல்லை. இதையடுத்து நீதிபதிகள், “அரசின் நிலை குறித்து முடிவு எடுக்க முடியுமா முடியாதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
இரண்டு வாரங்கள் அவகாசம் அளிக்கிறோம். ஆனால் முடிவைத் தெரிவித்தே ஆக வேண்டும்” என்று கூறி வழக்கு விசாரணையை ஏப்ரல் 19-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக