சென்னை:மின் தடையால் இருண்ட மாநிலமாக மாறிவரும் தமிழகத்தில் புதிய மின்கட்டண உயர்வு மூலம் தமிழக மக்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது ஆளும் அ.இ.அ.தி.மு.க அரசு. ஏற்கனவே பேருந்து கட்டணம், பால் விலை உயர்வு ஆகியவற்றால் அவதிக்குள்ளாகும் மக்களை வாட்டும் விதமாக வெளியாகியுள்ள இக்கட்டண உயர்வு ஒரு வருடத்திற்காம். இந்த கட்டண உயர்வு வரும், ஏப்ரல் 1- முதல் அமலுக்கு வருகிறது.
எவ்வளவுதான் மக்களை விரோத ஆட்சியை நடத்தினாலும் காசு கொடுத்தால் ஓட்டுக்கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஆட்சிபுரியும் அ.இ.அ.தி.மு.க அரசின் தொடர் அராஜ போக்கை இம்மின்கட்டண உயர்வு உணர்த்துகிறது.
மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று தமிழக அரசு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் கோரிக்கை வைத்தது. கடந்த 2004ம் ஆண்டுக்கு பிறகு மின் கட்டணம் உயர்த்தப்படவேயில்லை. கடந்த திமுக ஆட்சியில் ஒரு சில பிரிவுகளுக்கு மட்டுமே மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.
இப்படி மின் கட்டணம் உயர்த்தப்படாமலேயே இருப்பதால் மின்வாரியம் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது என்று தமிழக அரசு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் எடுத்துரைத்தது. மேலும் எந்த பிரிவுக்கு எவ்வளவு கட்டணம் உயர்த்தலாம் என்பதையும் அரசு முடிவு செய்து ஆணையத்திடம் கடந்த நவம்பர் மாதம் தெரிவித்தது.
இதையடுத்து ஆணையம் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களில் மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து பொது மக்களிடம் கருத்து கேட்டது. அதன் பிறகு மின் கட்டணத்தை எவ்வளவு உயர்த்துவது, வீடுகள், தொழிற்சாலைகள், உயர் அழுத்த மின்சார பயன்பாடிற்கான கட்டணத்தை எவ்வளவு அதிகரிப்பது என்பதை ஆணையம் முடிவு செய்தது.
மேலும் சிறு தொழில்கள், குடிசை தொழில்களுக்கான கட்டண உயர்வை அமுல்படுத்துவது குறித்தும் முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு மின்வாரிய ஒழுங்குமுறை ஆணைய உறுப்பினர்கள் நாகல்சுவாமி, வேணுகோபால் ஆகியோர் மின்கட்டண உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டனர்.
விவசாயத்திற்கு இலவச மின்சாரம் தொடரும் என்றும், விசைத்தறிக்கு 500 யூனிட் வரை மின்சாரம் இலவசம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஒவ்வொரு இரண்டு மாதத்துக்குமான புதிய மின்கட்டண உயர்வு விவரம்:
வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கான கட்டண விவரம்..
* 100 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு, ஒரு யூனிட்டுக்கு 25 பைசா உயர்வு. அதாவது, 100 யூனிட்டுக்கு கீழ் பயன்படுத்துவோருக்கு – ரூ.1.10 (ஒரு யூனிட்)
* 101-ல் இருந்து 200 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு – ரூ.1.80
* 201-ல் இருந்து 250 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு – ரூ.3
* 251-ல் இருந்து 500 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு – ரூ.3.50
* 500 யூனிட் வரை பயன்படுத்துவோரில் 200 யூனிட்கள் வரை பயன்படுத்துவோருக்கு ஒரு யூனிட் கட்டணம் – ரூ.3
* 201-ல் இருந்து 500 யூனிட் பயன்படுத்துவோருக்கு ஒரு யூனிட் கட்டணம் – ரூ. 4.
* 501 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு ஒரு யூனிட் கட்டணம் – ரூ. 5.75
* 200 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு அரசு மானியம் கிடையாது.
தொழிற்சாலைகளுக்கான புதிய மின் கட்டண விவரம்..
தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணம், யூனிட் ஒன்றுக்கு ரூ.4-ல் இருந்து ரூ.5.50 ஆக அதிகரிப்பு.
வர்த்தக நிறுவனங்களுக்கான புதிய மின் கட்டண விவரம்..
* 1 முதல் 100 யூனிட் வரை – ரூ.4.30
* 101 யூனிட்களுக்கு மேல் ரூ.7 கட்டணம்
குடிசைத் தொழில், சிறு தொழில்களுக்கான புதிய மின் கட்டண விவரம்
* 500 யூனிட் வரை – ரூ. 3.50
* 501 யூனிட்டுக்கு மேல் – ரூ.4
வழிபாட்டுத் தலங்களுக்கான புதிய மின் கட்டண விவரம்..
* 120 யூனிட் வரை ரூ.2.50
* 120 யூனிட்டுக்கு மேல் ரூ.5
விசைத்தறி கூடங்களுக்க்கான புதிய மின் கட்டண விவரம்..
* முதல் 500 யூனிட்களுக்கு கட்டணம் இல்லை.
* 500 யூனிட்டுக்கு மேல் யூனிட் ஒன்றுக்கு ரூ.4
கல்வி நிறுவனங்களுக்கான புதிய மின் கட்டண விவரம்..
* அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களுக்கு ஒரு யூனிட் கட்டணம் – ரூ.4.50
* தனியார் கல்வி நிறுவனங்களுக்கு ரூ.5 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும்..
* அலங்கார விளக்குகள் பயன்பாட்டுக்கு – ரூ.10.50
* உயர் அழுத்த மின் இணைப்புகளுக்கு – ரூ.5.50
* தற்காலிக உயர் அழுத்த மின் இணைப்பு பெறும் இணைப்புகளுக்கு – ரூ.9.50
* ரயில்வே பயன்பாட்டுக்கு ரூ.5.50 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளன.
நிலைக் கட்டணம்:
மின் பயன்பாட்டுக்கு புதியதாக நிலைக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வீடுகளுக்கான நிலைக்கட்டண விவரம்:
* 200 யூனிட் வரை – ரூ.10
* 200 யூனிட்டுக்கு மேல் – ரூ.15
* 500 யூனிட் வரை பயன்படுத்தினால் – ரூ. 20
* தொழில் நிறுவனங்களுக்கான நிலைக் கட்டணம் ரூ.50 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த கட்டண உயர்வு மூலம் ஓர் ஆண்டிற்கு ரூ.7874 கோடி ரூபாய் கூடுதல் வருமானம் அரசுக்கு கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் ஆண்டுக்கு ரூ.9742 கோடி வருமானம் கிடைக்கும் அளவிற்கு மின் கட்டண உயர்வு இருக்க வேண்டும் என தமிழக அரசு கேட்டுக் கொண்டிருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக