வெள்ளி, பிப்ரவரி 20, 2015

சவுதியின் புதிய மன்னர் அறிவித்த 2 மாத சம்பளம் போனஸ்: மகிழ்ச்சியில் அரசு ஊழியர்கள்

சவுதி அரேபியா நாட்டின் மன்னரான அப்துல்லா கடந்த மாதம் 23-ம் தேதி மரணம் அடைந்ததையடுத்து அவரது மகன் சல்மான் புதிய மன்னராக பதவியேற்றுக்கொண்டார். 

அந்நாட்டு வழக்கப்படி புதிதாக பொறுப்பேற்றுக்கொள்ளும் மன்னர்கள் மக்களுக்கு எதிர்பாராத சலுகைகளை அளித்து மகிழ்விப்பதுண்டு. அவ்வகையில், புதிய மன்னர் சல்மானும் ஒரு இனிய அறிவிப்பை வெளியிட்டார். அரசு பணியாளர்கள் மற்றும் அரசு உதவி பெற்று படிக்கும் மாணவ-மாணவியருக்கு 2 மாத போனஸ் வழங்குமாறு அவர் பிறப்பித்த உத்தரவு பலரை ஆனந்தத்தில் திக்குமுக்காட வைத்தது. 

இவ்வளவு பணத்தை எப்படி செலவழிப்பது? என்று வழியறியாத சவுதிமக்கள் ரியாத் மற்றும் ஜெட்டாவில் உள்ள பிரபல நகைக்கடைகளை மொய்க்க தொடங்கியுள்ளனர். வாடிக்கையாளர்களுக்கு நகைகளை காட்டி வியாபாரம் செய்வதற்குள் கடை ஊழியர்கள் திணறி போகின்றனர். 

வைர நகைகள், வைரக்கற்கள் பதிக்கப்பட்ட 'ரோலெக்ஸ்' கைக்கடிகாரங்கள், நெக்லஸ்கள், டிசைன் டிசைனான வளையல்கள் என வழக்கத்தைவிட வியாபாரம் மும்மடங்கு அதிகரித்துள்ளதாகவும், எதிர்வரும் நாட்களில் விற்பனை மேலும் பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் நகைக்கடை உரிமையாளர்கள் கூறினர். 

ரியாத்தில் உள்ள ஒரு கடையில் நகை வாங்கவந்த 19 வயது இளம்பெண்ணான நவ்ரா அல் அம்மர், ‘நாட்டின் செல்வத்தை மக்களுடன் பகிர்ந்து கொள்ள மன்னர் சல்மான் நினைக்கிறார். இதன்மூலம் அவர் எங்கள் மீது வைத்துள்ள அக்கறை புரிகின்றது. இதேபோல் நாங்களும் மன்னரின் மேல் அன்பாகவும், அக்கறையாகவும் இருப்போம்’ என தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக