செவ்வாய், பிப்ரவரி 17, 2015

பாப்புலர் ஃப்ரண்ட் தின கொண்டாட்டதிற்கு அனுமதி மறுப்பு : நீதிக்கான போராட்டம் தொடரும் !!!

பிப்ரவரி 1 7 - பாப்புலர் ஃப்ரண்ட்  தின கொண்டாட்டதிற்கு அனுமதி மறுப்பு  இது குறித்து கருத்து தெரிவித்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநில பொதுச்செயலாளர்  M. முகம்மது ஷேக் அன்சாரி  அவர்கள்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொடங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17-ம் தேதியை பாப்புலர் ஃப்ரண்ட் தினமாக இந்தியா முழுவதும் கொண்டாட முடிவு செய்யப்பட்டு கடந்த மூன்று வருடங்களாக சிறப்பான முறையில் கொண்டாடி வருகின்றோம்.


இவ்வருடம் பாப்புலர் ஃப்ரண்ட் தினத்தில் “ஜனநாயகத்திற்காக ஒன்றிணைந்தோம்” (United For Democracy) என்ற முழக்கத்தை முன்னிலைப்படுத்தி வருகிறோம். இதன் பொருள் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதில் அனைத்து மக்களின் கடமையுணர்வையும், உறுதியான நிலைபாட்டையும் வெளிப்படுத்துவதாகும். மேலும் ஜனநாயகத்தின் அடிப்படை விழுமியங்களுக்கு எதிராக செயல்படும் ஃபாஸிச சக்திகளை மக்கள் மன்றத்தில் தோலுரித்துக்காட்டி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, ஏகாதிபத்திய ஆதரவு கொள்கைகளை வளர்ச்சியின் பெயரால் அமல்படுத்தி தேசத்தின் வளங்களை சுரண்டும் முதலாளித்துவத்திற்கு எதிராக ஜனநாயகத்தை பாதுகாக்க அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்தலின் அவசியத்தை உணர்த்துவதே நமது நோக்கமாகும்.
இன்றைய தினம் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கொடியேற்ற நிகழ்ச்சிகள், மக்கள் நல பணிகள், விளையாட்டு போட்டிகள், மருத்துவ முகாம்கள், பொதுக்கூட்டங்கள், பேரணிகள் நடைபெற்று கொண்டு இருக்கின்றன. இதன் ஒரு பகுதியாக சென்னையிலும் திண்டுக்கல்லிலும் யூனிட்டி மார்ச் (Unity March) என்ற பெயரில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த காவல் துறையிடம் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே முறையாக அனுமதி கோரினோம். ஜனநாயக அடிப்படையிலும் அரசியலமைப்பு சட்டம் நமக்கு வழங்கிய உரிமைகள் அடிப்படையிலும் நாம் நடத்த தீர்மானித்த பேரணிக்கும் பொதுக்கூட்டதிற்கும் காவல் துறை சில போலியான குற்றச்சாட்டுகளை முன்வைத்து கடைசி நேரத்தில் அனுமதி மறுத்தது.
இந்நிலையில் நமது நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க காவல் துறைக்கு உத்தரவிடுமாறு சென்னை உயர்நீதி மன்றத்தை அணுகினோம். நீதிபதி சிவஞானம் அவர்களின் அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் காவல்துறையின் சார்பாக பொய்யான தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. நாமும் நமது தரப்பு வாதத்தை முன் வைத்தோம். இருந்த போதிலும் நீதிபதி நமது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். ஜனநாயக நாட்டில் சட்ட விழுமியங்களுக்கு உட்பட்டு நடைபெறும் கொண்டாட்டங்களுக்கும் போரட்டங்களுக்கும் அனுமதி மறுப்பு என்பது மக்கள் ஜனநாயகத்தின் மேல் வைத்துள்ள நம்பிக்கையை குறைத்துவிடும். காவல்துறையின் இது போன்ற மக்கள் விரோத போக்கு அவர்களின் சர்வாதிகார போக்கையே காட்டுகிறது.
பாப்புலர் ஃப்ரண்ட் இதுபோன்ற நிகழ்வுகளை இதற்கு முன்பும் எதிர்கொண்டுள்ளது. உறுதியான சட்ட போராட்டங்களின் மூலமும் மக்கள் திரள் போராட்டங்கள் மூலமும் நீதியை பெற முடியும் என பாப்புலர் ஃப்ரண்ட் நம்புகிறது. எனவே தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு சென்னை மற்றும் திண்டுகல்லில் நடைபெற இருந்த பேரணி மற்றும் பொதுகூட்டத்தை பாப்புலர் ஃப்ரண்ட் ரத்து செய்கிறது. மேலும் உயர் நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யவும் பாப்புலர் ஃப்ரண்ட் முடிவு செய்துள்ளது. நீதி துறையின் முறையான அனுமதி மூலம் மீண்டும் இதுபோன்ற நிகழ்சிகளை நடத்துவோம் எனவும் தெரியப்படுத்துகிறோம். நீதியை பெரும் வரை நமது போராட்டம் தொடரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக