திங்கள், பிப்ரவரி 23, 2015

தேன்நிலவுக்கு சென்ற போது விபரீதம்: 4,000 அடி உயர மலையில் இருந்து விழுந்து உயிர் தப்பிய கணவன்

தேன்நிலவுக்கு சென்ற ஒருவர் மனைவியை புகைப்படம் எடுக்கும்போது கால் தவறி 4 ஆயிரம் அடி உயரமுள்ள மலையில் இருந்து கீழே விழுந்து உயிர் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் மத்திய மாகாணம் பகுதியில் ஹர்டான் பீடபூமி பகுதி உள்ளது. இங்குள்ள மிக உயர்ந்த மலைகள் அந்நாட்டின் அதிமுக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருவதால், ஆண்டுதோறும் பல நாடுகளில் இருந்து இப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வந்தவண்ணம் உள்ளனர். இந்நிலையில் டச்சு நாட்டை  சேர்ந்த புதுமண தம்பதியர் தங்களது தேன்நிலவை கொண்டாட ‘வேர்ல்ட்ஸ் என்ட் மவுண்ட்டன்’ என்றழைக்கப்படும் இயற்கை எழில் கொஞ்சும் இந்த மலைப்பகுதிக்கு வந்தனர்.

மலை முகட்டின் ரம்மியமான அந்த சூழலில் தனது ஆசை மனைவியை நிற்க வைத்து அந்த 35 வயது புதுமாப்பிள்ளை புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது ஒரு மாறுபட்ட கோணத்திற்காக இரண்டடி பின்நோக்கி சென்றார். அந்த மலை முகட்டின் பின்னால் அடுத்த அடியை எடுத்து வைக்க இடமின்றி போனதால் சுமார் 4 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார். 'முடிந்தது நம் வாழ்க்கை' என அவரது மனம் அவசர கணக்கு போடத்தொடங்கிய நிலையில் மரத்தின் கிளை ஒன்று அவரை அரவணைப்பாய் தாங்கிக்கொண்டது.

மரத்தின் கிளையில் இருந்தபடி உயிர் பயத்தில் கத்திய அவரது கூக்குரலை கேட்டு அப்பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த சுமார் 40 இலங்கை ராணுவ வீரர்கள் ஒரு நீண்ட கயிற்றின் உதவியுடன் அவரை மரத்தில் இருந்து பத்திரமாக மீட்டனர். பின்னர் அங்கிருந்து ராணுவ ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவரது உடல்நிலை தேறி வருவதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக