சனி, பிப்ரவரி 21, 2015

படகு தகர்ப்பு நாடகம் என்பது இந்திய அதிகாரியின் அறிக்கையில் தெளிவாகிவிட்டது - பாகிஸ்தான் வெளியுறவுத் துறை

பாகிஸ்தான் படகு தான் உத்தரவிட்டதாலேயே குண்டுவீசி அழிக்கப்பட்டது என்று கூறிய பிரச்சினைக்குரிய கடலோர காவல்படை அதிகாரி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார்.


குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே இந்திய கடல் எல்லையில் நடமாடிய ஒரு பாகிஸ்தான் படகு டிசம்பர் 31-ந் தேதி தீப்பிடித்து எரிந்தது. அதில் இருந்த பாகிஸ்தானியர்கள் அனைவரும் பலியானார்கள். இந்த படகை இந்திய கடலோர காவல் படையினர் சுற்றிவளைத்து அதில் இருந்தவர்களை சரண் அடையும்படி கூறியதாகவும், ஆனால் அவர்கள் தாங்களாகவே குண்டை வெடிக்கச் செய்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது.

ஆனால் சில நாட்களுக்கு முன்னர் வடமேற்கு கடலோர காவல்படை தலைமை அதிகாரி டி.ஐ.ஜி. பி.கே.லோசாலி, தான் உத்தரவிட்டதன் பேரிலேயே பாகிஸ்தான் படகு குண்டு வீசி தகர்க்கப்பட்டதாக கூறினார். அவரது இந்த பேச்சால் மத்திய அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.

காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சியினர் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பினார்கள். பின்னர் மீண்டும் லோசாலி, தான் கூறியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று மறுப்பு தெரிவித்தார். பொறுப்பற்ற அந்த அதிகாரியின் நடவடிக்கைகள் மத்திய ராணுவ அமைச்சகத்துக்கு சிக்கலை ஏற்படுத்தியது.

இதனால் அன்று மாலையே ராணுவ அமைச்சகம் அந்த அதிகாரிக்கு நோட்டீசு அனுப்பியது. இந்த நிலையில் அந்த அதிகாரி லோசாலி நேற்று கடலோர காவல்படை தலைமை அலுவலகத்துக்கு மன்னிப்பு கேட்டு கடிதம் அனுப்பினார். தனது நடத்தைக்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாக அவர் கடிதத்தில் கூறியிருந்ததாக ராணுவ அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.


பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் தஸ்னீம் அஸ்லாம் பேசுகையில், “ இந்திய அதிகாரிகளால் வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய அறிக்கையால் பாகிஸ்தான் படகு தகர்ப்பு விவகாரம் ஒரு நாடகம் என்பது தற்போது வெளியாகியுள்ளது,” என்று கூறினார். இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் எஸ். ஜெய்சங்கர் பாகிஸ்தான் வருகைதொடர்பான கேள்விக்கு அஸ்லாம் பதில் அளிக்கையில், இந்திய வெளியுறவுச் செயலாளர் இஸ்லாமாபாத் வரும்போது இருநாடுகள் இடையிலான பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று கூறினார். இருப்பினும் இந்திய வெளியுறவுச் செயலாளர் வருகை தொடர்பான தேதி இறுதிசெய்யப்படவில்லை என்று தெரிவித்துவிட்டார். 

இந்தியாவுடனான பேச்சுவார்த்தை அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் என்பதிலே பாகிஸ்தான் ஈடுபாடு கொண்டிருந்தது, பின்வாங்கவில்லை என்றும் அஸ்லாம் குறிப்பிட்டுள்ளார்.  சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரெயில் குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணை தகவல்களையும் இந்தியா பகிர்ந்துக் கொள்ளவில்லை என்று அஸ்லாம் தெரிவித்துள்ளார். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக