செவ்வாய், பிப்ரவரி 10, 2015

டெல்லி தேர்தல்: ஆம்ஆத்மி 67 இடங்களில் அமோக வெற்றி : பா.ஜ.க, காங். படுதோல்வி!!

டெல்லி சட்டசபைக்கு கடந்த சனிக்கிழமை தேர்தல் நடந்தது. 

மொத்தம் உள்ள 1.33 கோடி வாக்காளர்களில் 67.14 சதவீதம் பேர் வாக்குகளை பதிவு செய்தனர். டெல்லி தேர்தலில் பா.ஜனதா, ஆம்ஆத்மி, காங்கிரஸ் கட்சிகளிடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டிருந்தது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளிலும் 673 பேர் போட்டியிட்டனர்.  70 தொகுதி ஓட்டுக்களும் டெல்லியில் 14 இடங்களில் பலத்த பாதுகாப்புடன் காலை 8 மணிக்கு எண்ணத் தொடங்கப்பட்டன. 

10 மணிக்கு 70 இடங்களிலும் வெற்றி பெறும் கட்சிகள் நிலவரம் தெரிய வந்தது. ஆம்ஆத்மி–61, பா.ஜனதா–8, மற்றவர்கள்–1 என்ற நிலையில் வெற்றி முன்னிலை தெரிய வந்தது. இறுதியில் ஆம்ஆத்மி–67, பா.ஜ.க.–3, மற்றவர்கள்–0 என்ற வெற்றி நிலை உறுதியானது. 

கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் பா.ஜ.க. இந்த தடவை 27 இடங்களை பறி கொடுத்துள்ளது. கடந்த தேர்தலில் 8 இடங்களில் வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. தேசியக் கட்சியான காங்கிரஸ் டெல்லியில் முட்டை வாங்கி இருக்கிறது. 15 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆட்சி செய்த காங்கிரசுக்கு டெல்லி வாக்காளர்கள் பரிதாபத்துக்குரிய இந்த பரிசை கொடுத்து இருக்கிறார்கள்.

ஆம் ஆத்மி வெற்றி குறித்து தலைவர்கள் கருத்து :

ஜி.கே.வாசன் (த.மா.கா. தலைவர்):– 
டெல்லி சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. ஜனநாயகத்தில் மக்களின் தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.மத்தியில் ஆட்சி புரிகின்ற பாரதீய ஜனதா கட்சி தனது மதவாதக்கொள்கை, மக்கள் நலத் திட்டங்களை முடக்க நினைப்பது, மதத்தின் பெயரால் பிரிவினை ஏற்படுத்த முயற்சிப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை இத்தேர்தல் முடிவு எடுத்துக்காட்டுகிறது.மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மறந்து வெறும் கோஷங்களை மட்டும் வைத்து ஆட்சி புரிகின்ற பா.ஜ.க வின் வேஷம் கலையத் தொடங்கியிருக்கின்றது.

ஜி.ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு செயலாளர்):–

2013 சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜனதாவுக்கு அதிகமான இடங்களும் கிடைத்தது. ஓட்டு சதவீதமும் அதிகமாக கிடைத்து இருந்தது.இந்த தேர்தலில் ஆம் ஆத்மி தனி மெஜாரிட்டி பெற்றுள்ளது. பா.ஜனதாவுக்கு ஓட்டு சதவீதமும் இல்லை. சீட்டும் மிகவும் குறைந்துள்ளது. காங்கிரசுக்கு ஓட்டும் இல்லை. சீட்டும் இல்லை.பா.ஜனதா அரசு கடந்த 9 மாதங்களில் கடைப்பிடித்து வரும் தவறான நவீன தாராள மயமாக்கல் கொள்கை, அப்பட்டமான மதவாதம் ஆகியவற்றுக்கு மக்கள் பாடம் புகட்டி இருக்கிறார்கள். டெல்லி தீர்ப்பு வரவேற்கத்தக்கது.

மேற்கு வங்காளம் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி 

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மம்தா பானர்ஜி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், "இது மக்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி ஆகும். அராஜகவாதிகளுக்கு கிடைத்த பெருந்தோல்வி. அரசியல் லாபத்திற்காக மக்கள் மத்தியில் வெறுப்பை விதைப்பவர்களுக்கு கிடைத்த தோல்வி." என்று தெரிவித்துள்ளார்.

மற்றொரு டுவிட்டில், "நாட்டில் தற்போது நிலவும் அரசியல் சூழலில் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி திருப்புமுனையாக அமைந்துள்ளது. ஜனநாயகத்தில் அரசியல் சூழ்ச்சிகளுக்கு இடமில்லை என்று காட்டப்பட்டுள்ளது. நாட்டிற்கு இந்த மாற்றமே தேவைப்படுகிறது. என்று குறிப்பிட்டுள்ளார். டெல்லியில் பெரும் வெற்றியை பெற்ற ஆம் ஆத்மிக்கு இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்.

உத்தவ் தாக்கரே: 

இந்த (டெல்லி சட்டசபை) தேர்தல் முடிவை நரேந்திர மோடிக்கு கிடைத்த தோல்வி என்று சொல்வது தவறாக இருக்க முடியாது. நாடு முழுவதும் மோடி அலை வீசுவதாக பேசப்பட்டது. இந்நிலையில், அலையை விட சுனாமி வல்லமையானது என்பதை டெல்லி மக்கள் காட்டி விட்டனர்.

வெற்றியடைந்த அரவிந்த் கெஜ்ரிவாலுடன் இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தேன். டெல்லியின் முன்னேற்றத்துக்காக உழையுங்கள்  என்று தெரிவித்தார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக