புதன், பிப்ரவரி 04, 2015

பிரவீண் தொகாடியா ஒரு வாரத்திற்கு பெங்களூருக்குள் நுழைய தடை

விஷ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவீண் தொகாடியா பெங்களூரில் நுழைய பெங்களூர் போலீஸ் ஒரு வாரம் தடை விதித்துள்ளது.

பெங்களூர் பசவனகுடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட நேஷனல் கல்லூரி மைதானத்தில் இந்து அமைப்புகள் சார்பில் வருகிற 8-ந்தேதி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பஜ்ரங்தள், ஸ்ரீராம்சேனை உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் கலந்து கொள்ள உள்ளன. மாநாட்டில் விசுவ இந்து பரிஷத்தின் தேசிய தலைவர் பிரவீண் தொகாடியா கலந்து கொள்ள இருப்பதாகவும், இதற்கான அனுமதியை அளிக்கும்படியும் இந்து அமைப்பினர் சார்பில் போலீசாரிடம் அனுமதி கோரப்பட்டு இருந்தது. ஆனால் விசுவ இந்து பரிஷத் தலைவர் பிரவீண் தொகாடியா பெங்களூர் நகருக்குள் நுழைய தடை விதித்து போலீஸ் கமிஷனர் எம்.என். ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ‘‘பெங்களூர் பசவனகுடியில் உள்ள நேஷனல் கல்லூரி மைதானத்தில் இந்து அமைப்புகள் சார்பில் மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டில் விசுவ இந்து பரிஷத் தலைவர் பிரவீண் தொகாடியா கலந்து கொள்ள அனுமதி கேட்டு இருந்தனர். பிரவீண் தொகாடியா சர்ச்சைகளுக்கு உரிய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

அவர் பெங்களூரில் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொண்டு ஏதாவது சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தால் சட்டம்- ஒழுங்கு பாதிக்கப்படும். எனவே அவர் மாநாட்டில் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்படுகிறது. மேலும் விசுவ இந்து பரிஷத் தலைவர் பிரவீண் தொகாடியா வியாழக்கிழமை (5-ந்தேதி) முதல் வருகிற 11-ந்தேதி வரை 7 நாட்கள் பெங்களூர் நகருக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது’’ என்று போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டி கூறியுள்ளார்.

கர்நாடாக உள்பட நாட்டின் பல்வேறு இடங்களில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக பிரவீண் தொகாடியா மீது 19-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக