வெள்ளி, பிப்ரவரி 20, 2015

கோட்சே சிலை விவகாரம்: தமிழக அரசு கூர்ந்து கவனிப்பதாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தகவல்

'தமிழகத்தில் நாதுராம் கோட்சேவின் சிலைகள் எந்த ஓர் இடத்திலும் நிறுவப்படவில்லை. நிலைமை கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது' என சட்டப்பேரவையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அளித்த விளக்கம்:
"அகில பாரத இந்து மகாசபா அமைப்பினர் நாதுராம் கோட்சேயின் சிலைகளை மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினத்தன்று நாடு முழுவதும் நிறுவப்போவதாக அறிவிப்பு செய்து ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து சிலைகளை நாடு முழுவதும் அனுப்ப ஏற்பாடுகளை செய்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து மேற்படி அமைப்பில் இரு பிரிவுகளாக செயல்பட்டு வரும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மற்றும் திருச்சியைச் சேர்ந்த ராஜசேகரன் ஆகியோர் தமிழகத்தில் ஈரோடு உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கோட்சேயின் சிலைகளை அமைக்கப் போவதாக அறிவித்தனர்.

மேலும், இவ்விரு பிரிவினரும் காவல் துறையினர் சிலைகளை வைக்க அனுமதி மறுக்கும்பட்சத்தில் முதற்கட்டமாக தங்கள் அமைப்பின் அலுவலக வளாகங்களில் கோட்சேவின் சிலைகளை நிறுவ உள்ளதாகவும் தெரிவித்தனர்.மதிமுக, தமிழ் மாநில காங்கிரஸ், சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா, காங்கிரஸ், பாமக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, மாநில அரசு இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்தனர்.

மேலும் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் சிலைகள் அமைக்கும் நாளன்று கோட்சேவின் உருவ பொம்மைகளை மாநிலம் முழுவதும் எரித்து போராட்டம் நடத்தப் போவதாக தெரிவித்தனர்.

இந்திய தேசிய லீக் கட்சியினர் (தடா ரஹீம் பிரிவு) கோட்சே சிலைகள் அமைக்கப்பட்டால் தாங்கள் பாராளுமன்ற தாக்குதல் வழக்கின் குற்றவாளியான அப்சல் குருவிற்கு நினைவிடம் கட்டுவதாக தெரிவித்தனர்.
அகில பாரத இந்து மகாசபா அமைப்பினர் சிலை நிறுவும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, சாதி மற்றும் மத ஒழிப்பு இயக்கத்தின் உறுப்பினர்கள் 08.01.2015 அன்று திண்டுக்கல்லிலும், இந்திய மாணவர் சங்கத்தினர் 30.01.2015 அன்று கோயம்புத்தூரிலும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும், தந்தை பெரியார் திராவிட கழக உறுப்பினர்கள் 260 பேர் 30.01.2015 அன்று கோட்சேவின் உருவ பொம்மைகளை கோயம்புத்தூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் எரித்து எதிர்ப்பை தெரிவித்தனர்.மேலும் சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா கட்சியினர் 1600 பேரும் 23 மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சிலைகள் அமைக்க மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் காவல் துறையினர் அனுமதி அளிக்காததையடுத்து, இவ்வமைப்பினர் அறிவித்தது போன்று 30.01.2015 அன்று தமிழகத்தில் கோட்சேவின் சிலைகள் எங்கும் நிறுவவில்லை. நிலைமை கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது" என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக