ரயில்வே பட்ஜெட்டில் புதிய திட்டங்களோ, ரயில்களோ அறிவிக்கப்படாதது ஏமாற்றம் அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாடாளுமன்றத்தில் 2015 - 16 ஆம் ஆண்டிற்கான தொடர்வண்டித்துறை நிதிநிலை அறிக்கையை அத்துறையின் அமைச்சர் சுரேஷ் பிரபு தாக்கல் செய்திருக்கிறார். சுரேஷ்பிரபு மிகச்சிறந்த நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மிகப்பெரிய ஏமாற்றத்தையே பரிசாகத் தந்திருக்கிறார்.
மத்தியில் நரேந்திரமோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவியேற்ற சில வாரங்களிலேயே டீசல் விலை உயர்வைக் காரணம் காட்டி பயணிகள் கட்டணம் 14.5 விழுக்காடு உயர்த்தப்பட்டது. அதன்பிறகு டீசல் விலை லிட்டருக்கு ரூ.12.13 குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கேற்றவாறு பயணிகள் மற்றும் சரக்குக் கட்டணம் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பயணிகள் கட்டணம் குறைக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது. அதேபோல், புதிய ரயில்களோ, புதிய ரயில்வே திட்டங்களோ அறிவிக்கப்படாததும் வருத்தமளிக்கிறது. ஆய்வுகள் முடிக்கப்பட்ட பின் புதிய ரயில்கள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று அமைச்சர் அறிவித்துள்ளார். ஆய்வுப்பணியை விரைவாக முடித்து புதிய ரயில்கள் குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும். மேலும், கடந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டு இயக்கப்படாத ரயில்களையும் உடனடியாக இயக்க வேண்டும்.
கடந்த 6 ஆண்டுகளாக தமிழகத் தொடர்வண்டித் திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கப்படாத நிலையில், நிலுவையில் உள்ள திட்டங்களுக்குத் தேவைப்படும் ரூ.9215 கோடி நிதியை நடப்பாண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் ஒதுக்க வேண்டும் என்று தொடர்வண்டித்துறை அமைச்சர் சுரேஷ்பிரபுவிடம் பா.ம.க.வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர்கள் மருத்துவர் அன்புமணி இராமதாசு, அரங்க.வேலு ஆகியோர் நேரில் மனு கொடுத்தனர். அதன்பிறகும் தமிழகத் திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. தமிழ்நாட்டை தொடர்வண்டித்துறை அமைச்சகம் தொடர்ந்து புறக்கணித்து வருவதையே இது காட்டுகிறது. இந்த நிலையை மாற்றி தமிழகத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கான அறிவிப்பை தமது பதிலுரையிலாவது சுரேஷ் பிரபு வெளியிட வேண்டும். நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும் சென்னை ராயபுரத்தில் புதிய தொடர்வண்டி முனையம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான அறிவிப்பையும் தொடர்வண்டி அமைச்சர் வெளியிட வேண்டும்.
தொடர்வண்டித் திட்டங்களை செயல்படுத்துவதற்காக அடுத்த 5 ஆண்டுகளில் 8.5 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் என்று அமைச்சர் அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நிதியை திரட்டுவதற்காக அமைச்சர் அறிவித்துள்ள வழிமுறைகள் எந்த அளவுக்கு பயனளிக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அதேநேரத்தில், பாராட்டப்பட வேண்டிய பல அம்சங்களும் இந்த நிதிநிலை அறிக்கையில் இருக்கத்தான் செய்கின்றன. குறிப்பாக பயணிகளின் வசதிகளை மேம்படுத்தவும், பாதுகாப்பை வலுப்படுத்தவும் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பயணிகளின் வசதிக்கான நிதி ஒதுக்கீடு 67% உயர்த்தப்பட்டிருப்பது, 5 நிமிடங்களில் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதி, 17 ஆயிரம் பயோ கழிப்பறைகள் அமைக்கும் திட்டம், செல்பேசியில் மின்னேற்றம் செய்யும் வசதி, தொடர்வண்டி நிலையங்களில் ஃவைஃபை வசதி, பெண்கள் பயணம் செய்யும் பெட்டிகளில் கண்காணிப்பு கேமிரா வசதி, அவசர உதவிக்கான இலவச தொலைபேசி அழைப்பு வசதி, மூத்தகுடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் ஆகியவை வரவேற்கத்தக்கவை.
நாடு முழுவதும் 3438 கடவுப்பாதைகளை அகற்றுவதற்காக ரூ.6581 கோடியில் 917 மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் அமைக்கப்படும்; அனைத்து ஆளில்லாத கடவுப்பாதைகளும் மாற்றப்படும் என்ற அறிவிப்பும் பயனளிக்கக் கூடியதாகும். தொடர்வண்டிகளின் வேகம் அதிகரிப்பு, அதிவேக ரயில்பாதைகள் அறிவிப்பு, ரயில்வேத்துறை நிலங்களில் சூரிய ஒளி மூலம் 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம் ஆகியவையும் வரவேற்கத்தவையாகும். அறிவிப்புடன் நிறுத்தி விடாமல் இத்திட்டங்களை விரைந்து செயல்படுத்துவதற்கு தொடர்வண்டித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக