செவ்வாய், பிப்ரவரி 24, 2015

மார்க்சிஸ்ட் மாநில குழுவில் இருந்து அச்சுதானந்தன் திடீர் நீக்கம் : கேரள அரசியலில் பரபரப்பு..

கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழுவில் இருந்து அச்சுதானந்தன் நீக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில மாநாடு கடந்த 20ம் தேதி ஆலப்புழாவில் தொடங்கியது. இதில், கேரள எதிர்க்கட்சித் தலைவர் அச்சுதானந்தனுக்கும், மாநில செயலாளர் பினராய் விஜயனுக்கும் இடையேயான மோதல் பூதாகரமாக வெடித்தது. மாநாட்டில் அச்சுதானந்தனை பினராய் விஜயன் கடுமையாக தாக்கிப் பேசினார். அச்சுதானந்தனைக் கண்டித்து மாநாட்டில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. மனமுடைந்த அவர் மாநாட்டிலிருந்து வெளியேறினார். 

இதற்கிடையே அவர் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக பரபரப்பாக பேசப்பட்டது. நேற்று அச்சுதானந்தன் பத்திரிகையாளர்களை சந்தித்து இது தொடர்பாக அறிவிக்கப் போவதாகவும் கூறப்பட்டது. நேற்று காலை முதலே திருவனந்தபுரத்திலுள்ள அச்சுதானந்தனின் வீட்டின் முன் பத்திரிகையாளர்கள் குவிந்தனர். ஆனால் அவர் பத்திரிகையாளார்களை சந்திக்காமல் ஒரு அறிக்கையை மட்டும் வெளியிட்டார். அதில், தன்னை கட்சி துரோகி என்று மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றி விட்டு அதே மாநாட்டில் தன்னால் கலந்துகொள்ள முடியாது என குறிப்பிட்டிருந்தார். இதை தொடர்ந்து அச்சுதானந்தன் மாநிலக் கமிட்டியிலிருந்து நீக்கப்பட்டார். மேலும் அவர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கட்சி மேலிடம் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே நேற்று ஆலப்புழாவில் நடந்த 4 நாள் மாநாடு நிறைவடைந்தது. இதில் புதிய மாநில செயலாளராக மூத்த தலைவர் கோடியேரி பாலகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக