திங்கள், பிப்ரவரி 16, 2015

பதவியேற்பின் போது குடிசைகளை இடித்த போலீசார்: அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டின் முன் பொதுமக்கள் போராட்டம்

டெல்லி முதல் மந்திரியாக ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால்  பதவி ஏற்றுக் கொண்ட அதே நேரத்தில் தங்களது குடிசைகளை போலீசார் இடித்து அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கெஜ்ரிவால் வீட்டின் முன்  நேற்று  குடிசைவாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 



டெல்லியின் ஷாதாரா பகுதியில் உள்ள சோட்டா நகருக்கு நேற்று திடீரென்று வந்த போலீசார் தங்களது குடிசைகளை இடித்து, பொருட்களை எல்லாம் தூக்கி எறிந்ததுடன் சில பெண் போலீசார் குடிசைகளுக்குள் இருந்த பெண்களை வெளியே இழுத்துத்தள்ளி கண்மூடித்தனமாக தாக்கியதாக அந்த குடிசைவாசிகள் குற்றம் சாட்டினர். 

போலீசரின் இந்த அத்துமீறலை கண்டித்து இன்று ஏராளமான குடிசைவாசிகள் கவுஷம்பி பகுதியில் உள்ள டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டின் முன்னர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இச்சம்பவம் தொடர்பாக கருத்து கூறிய போலீசார் அரசு நிலத்தை ஆக்கிரமித்து குடிசை போட முயன்ற சிலரை தடுத்து நிறுத்தினோம். நாங்கள் யாரையும் தாக்கவில்லை என்று தெரிவித்தனர். 

இந்த போராட்டம் பற்றிய தகவல் அறிந்தவுடன் இவ்விவகாரம் தொடர்பாக கவனித்து நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வான ராம் நிவாஸ் கோயல் என்பவருக்கு கெஜ்ரிவால் உத்தரவிட்டதாகவும், இதை தொடர்ந்து குடிசைவாசிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றதாகவும் கூறப்படுகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக