ஞாயிறு, பிப்ரவரி 22, 2015

பெட்ரோலிய அமைச்சக ஆவண திருட்டில் ரூ.10,000 கோடி இமாலய ஊழல் நடந்துள்ளது.

பெட்ரோலிய அமைச்சக ஆவணங்கள் திருடப்பட்ட விவகாரத்தில், ரூ.10,000 கோடி ஊழல் நடந்துள்ளது என கைதான நிருபர் சாந்தனு சைக்கா  பரபரப்பு குற்றச்சாட்டு கூறி உள்ளார். மத்தியில் பாஜ அரசு பதவி ஏற்ற பிறகு எழுந்துள்ள மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டு இது. மேலும், திருட்டு ஆவணங்களை  வாங்கியதாக சில கார்ப்பரேட் நிறுவனங்களின் உயர் அதிகாரிகளையும் டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் மத்திய அரசை எதிர்க்கட்சிகள்  கடுமையாக விமர்சித்து வருகின்றன. டெல்லி சாஸ்திரிபவனில் மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு, உயர்  அதிகாரிகளின் அறைக்குள் வைக்கப்பட்டிருக்கும் முக்கிய ஆவணங்களை ஜெராக்ஸ் எடுத்து திருடி அவற்றை தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சிலர்  விற்பதாக டெல்லி கிரைம் பிராஞ்ச் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், கடந்த புதன் கிழமை நள்ளிரவில் போலீசார் திடீர் சோதனை  மேற்கொண்டனர்.

அப்போது, அலுவலகத்தில் இருந்து ஆவணங்களை திருடி வந்த 5 பேரை கையும் களவுமாக பிடித்தனர். அவர்களில் 2 பேர் அமைச்சகத்தின் அதிகாரிகள். 2 பேர்  முன்னாள் ஊழியர்கள். ஒருவர் ரிலையன்ஸ் நிறுவன ஊழியர். இவர்கள், வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி  தாக்கல் செய்ய இருந்த பட்ஜெட் உரையையும் திருடி வைத்திருந்தது மத்திய அரசேயே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. மேலும், எரிசக்தி மற்றும் பெட்ரோலிய  துறையின் முக்கிய ஆவணங்கள், பிரதமர் அலுவலக முதன்மை செயலர், பிரதமருக்கு எழுதிய கடிதம், பட்ஜெட்டில் பெட்ரோலியம், எரிவாயு தொடர்பாக  தாக்கல் செய்யப்பட இருந்த முக்கிய அம்சங்கள் குறித்த ஆவணங்களும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. 

இதைத்தொடர்ந்து, திருட்டு ஆவணங்கள் வாங்கியதாக டெல்லியை சேர்ந்த முன்னாள் நிருபர் சாந்தனு சைக்கா, எரிசக்தி ஆலோசகர் பிரயாஸ் ஜெயின்  ஆகியோரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இதில், சாந்தனு சைக்கா நேற்று போலீசில் அளித்துள்ள வாக்குமூலம் இன்னும் பரபரப்பாக்கி  உள்ளது. ‘நான் எந்த ஆவணத்தையும் கசிய விடுவதற்காக முயற்சிக்கவில்லை. இந்த விவகாரத்தில் ரூ.10,000 கோடிக்கு ஊழல் நடந்து உள்ளது. அதை  வெளிச்சத்துக்கு கொண்டுவரவே ஆவணங்களை வாங்கினேன்’ என கூறி உள்ளார். கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது பல்வேறு ஊழல்  குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் மக்களவை தேர்தல் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. 

இதன் பிறகு, மத்தியில் பாஜ ஆட்சிப்பொறுப்பேற்ற எழுந்துள்ள மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டு இது. இதனால் மத்திய அமைச்சக அலுவலகங்களின் பாதுகாப்பும்  நம்பகத்தன்மையும் கேள்விக்குறியாகி உள்ளது. அதே நேரத்தில், பிரயாஸ் ஜெயின் அளித்த தகவலின் பேரில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் மேலாளர் சைலேஷ்  சக்சேனா, நொய்டாவின் ஜூப்ளியன்ட் எனர்ஜி நிறுவனத்தின் மூத்த செயல் அதிகாரி சுபாஷ் சந்திரா, எஸ்ஸார் நிறுவனத்தின் துணை பொது மேலாளர் வினய்  குமார், கெய்ர்ன்ஸ் இந்தியா நிறுவனத்தின் பொது மேலாளர் கே.கே.நாயக், ரிலையன்ஸ் ஆதாக் நிறுவனத்தின் துணை பொது மேலாளர் ரிஷி ஆனந்த் என  கார்ப்பரேட் நிறுவனங்களில் உயர் அதிகாரிகள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதில், நொய்டாவில் உள்ள ஜூப்ளியன்ட் எனர்ஜி நிறுவனத்தில் போலீசார் நேற்று ரெய்டு நடத்தி, திருடப்பட்ட முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். பட்ஜெட்  தொடர்பான ஆவணங்கள் வெளியான விவகாரம் தொடர்பாக பிரதமர் அலுவலகத்தில், இணைச் செயலாளர் தரத்தில் உள்ள சுமார் 15 அதிகாரிகளின்  நடவடிக்கைகளை கண்காணிக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த விவகாரத்தில் வெளியாகி உள்ள ஊழல்  குற்றச்சாட்டை தொடர்ந்து, மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் எதிர்க்கட்சிகள் வெகுவாக விமர்சித்து வருகின்றன. 

நாளை பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்க உள்ளநிலையில் இந்த குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், நாடாளுமன்றத்திலும் இப்பிரச்னையை எழுப்பி எதிர்க்கட்சியில்  அமளியில் ஈடுபடும் சூழல் உருவாகி உள்ளது. இதனால் மத்திய அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக