சனி, பிப்ரவரி 14, 2015

ஸ்ரீரங்கம் தொகுதியில் 81.79 சதவீதம் ஓட்டுப்பதிவு திங்கட்கிழமை வாக்கு எண்ணிக்கை

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு அமைதியாகவும் விறுவிறுப்பாகவும் நடந்தது. 81.79 சதவீதம் வாக்குகள் பதிவாயின. ஓட்டு எண்ணிக்கை திங்கட்கிழமை நடைபெறுகிறது.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்

தமிழக சட்டசபையில் காலியாக உள்ள ஸ்ரீரங்கம் தொகுதிக்கு நேற்று இடைத்தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் எஸ்.வளர்மதி (அ.தி.மு.க.), என்.ஆனந்த் (தி.மு.க.), எம்.சுப்பிரமணியம் (பா.ஜ.க.), கே.அண்ணாதுரை (மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு), ஹேமநாதன்(ஐக்கிய ஜனதா தளம்) மற்றும் 24 சுயேச்சைகள் உள்பட 29 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

வாக்காளர்கள் ஓட்டுப் போடுவதற்காக தொகுதி முழுவதும் 322 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தலா 2 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், அதனுடன் இணைந்த கட்டுப்பாட்டுகருவிகள் வைக்கப்பட்டு இருந்தன.

விறுவிறுப்பான வாக்குப்பதிவு

வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது. அதற்கு முன்னதாக காலை 6 மணிக்கு வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தி காண்பிக்கப்பட்டது.

பல வாக்குச்சாவடிகளில் 7 மணிக்கு முன்பாகவே வாக்காளர்கள் வரிசையில் காத்து நின்றனர். ஏராளமான ஆண்களும், பெண்களும் வாக்குச்சாவடிகளுக்கு ஆர்வத்துடன் வந்து வரிசையில் நின்று ஓட்டுப் போட்டனர். இதனால் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. நகர பகுதிகளில் இருந்த அதே விறுவிறுப்பை கிராம பகுதிகளிலும் காணமுடிந்தது.
 எந்தவித அசம்பாவித சம்பவங்களும் இன்றி வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது.

81.79 சதவீதம் ஓட்டுப்பதிவு

மாலை 6 மணியுடன் ஓட்டுப்பதிவு முடிந்தது. 81.79 சதவீதம் வாக்குகள் பதிவானதாக திருச்சி கலெக்டர் அலுவலகம் சார்பில் நேற்று இரவு அறிவிக்கப்பட்டது. ஸ்ரீரங்கம் தொகுதியில் 2 லட்சத்து 21 ஆயிரத்து 60 வாக்காளர்கள் நேற்று வாக்குகளை பதிவு செய்து உள்ளனர்.

ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 976 பேரும், பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 77 பேரும், இதர வாக்காளர்கள் 7 பேரும் வாக்களித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் 82.04 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது.

16-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை

வாக்குப்பதிவு முடிந்ததும் அனைத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் திருச்சியை அடுத்த பஞ்சப்பூரில் உள்ள சாராநாதன் பொறியியல் கல்லூரிக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டன. அங்கு துணை ராணுவத்தினர் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.

16-ந்தேதி (திங்கட்கிழமை) ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. அன்று பகல் ஒரு மணிக்குள் முடிவு தெரிந்து விடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக