வெள்ளி, மார்ச் 30, 2012

சட்டவிரோத சுரங்க தொழில்: எடியூரப்பாவுக்கு ஆதாயம் – உச்சநீதிமன்ற குழு அறிக்கை!


பெங்களூர்:கர்நாடகா மாநிலத்தில் சட்டவிரோத சுரங்கத் தொழில் தொடர்பாக விசாரணை நடத்திய உச்சநீதிமன்ற உயர்மட்டக்குழு தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இதனால் மீண்டும் முதல்வர் கனவில் மூழ்கியுள்ள எடியூரப்பாவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

சட்டவிரோத சுரங்கத்தொழில் மூலமாக எடியூரப்பாவும், அவரது குடும்பத்தினரும் ஆதாயம் பெற்றதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எடியூரப்பா மீது விசாரணை நடத்தவேண்டும் என்று அறிக்கையில் சிபாரிசுச் செய்யப்பட்டுள்ளது.
பிரவீண் சந்திரா என்ற தொழிலதிபருக்கு சித்ரதுர்கா மாவட்டத்தில் 100 ஏக்கர் வனபூமியில் சுரங்கத் தொழில் நடத்த லைசன்ஸ் வழங்கியது மூலம் எடியூரப்பாவும், அவரது குடும்ப உறுப்பினர்களும் ஆதாயம் பெற்றதாக அறிக்கையில் கூறப்ப்பட்டுள்ளது. லைசன்ஸ் வழங்கியதற்காக எடியூரப்பாவின் குடும்பத்தினருக்கு சொந்தமான பகத் ஹோம்ஸ், தாவலகிரி டெவலப்மெண்ட்ஸ் ஆகியவற்றிற்கு பிரவீன் சந்திரா ஆறு கோடி ரூபாய் வழங்கியுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து முதல்வர் பதவிக்காக எடியூரப்பா நடத்திய முயற்சிகள் விழலுக்கு இரைத்த நீராக மாறும் என கருதப்படுகிறது. மார்ச் 18-ஆம் தேதி முதல் எடியூரப்பா நடத்திய ரிசார்ட் அரசியல் மூலமாக பா.ஜ.க மேலிடத்தில் இருந்து மீண்டும் முதல்வர் பதவி கிடைப்பதற்கான உறுதிமொழியை பெற்றிருந்தார். ஆனால், உச்சநீதிமன்ற குழுவின் அறிக்கையை தொடர்ந்து மீண்டும் முதல்வர் பதவி என்பது எடியூரப்பாவிற்கு கானல் நீராகும் வாய்ப்பு அதிகமாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக