சனி, மார்ச் 31, 2012

மகளை கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்த வழக்கில் பஞ்சாப் பெண் அமைச்சருக்கு 5 ஆண்டு சிறை!


பாடியாலா:தனது சொந்த மகளை கடத்திச் சென்று கட்டாயப்படுத்தி கருக்கலைப்புச் செய்த வழக்கில் பஞ்சாப் மாநில பெண் அமைச்சருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சி.பி.ஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மாநில கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரும், சிரோண்மனி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி(எஸ்.ஜி.பி.சி) முன்னாள் தலைவருமான ஜாகிர் கவுரின் மகள் ஹர்பிரீத் கவுர் கடந்த 2000-ம் ஆண்டில் மர்மமான முறையில் இறந்தார்.
இது தொடர்பாக ஜாகிர் கவுர் உள்ளிட்ட 4 பேர் மீது சதி செய்தல், கொலை, பலவந்தமாக கருக்கலைப்பு செய்தல், ஆள்கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஹர்பீரீத் கவுரின் கணவர் கமல்ஜித் இந்த புகாரை அளித்திருந்தார்.
தனது மனைவியை ஜாகிர் கவுர் வலுக்கட்டாயமாக பலம் பிரயோகித்து அழைத்துச்சென்று கருக்கலைப்புச் செய்ததாகவும், அவருடைய மரணம் இயற்கையானது அல்ல என்றும் கமல்ஜித் தனது புகாரில் கூறியிருந்தார். உயர்நீதிமன்றம் இவ்வழக்கை விசாரிக்கும் பொறுப்பை சி.பி.ஐயிடம் ஒப்படைத்திருந்தது.
இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்த சிபிஐ நீதிமன்றம் ஜாகிர் கவுருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது. கொலைக் குற்றச்சாட்டிலிருந்து 4 பேரும் விடுவிக்கப்பட்டனர்.
நீதிபதி தீர்ப்பை வாசித்ததும் நீதிமன்றத்திலேயே ஜாகிர் கவுர் கண்ணீர்விட்டு அழுதார். மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
1995-ம் ஆண்டில் சிரோமணி அகாலிதளம் கட்சியில் சேர்ந்த கவுர், பாதல் அமைச்சரவையில் ஒரே பெண் அமைச்சராவார். இந்த மாத தொடக்கத்தில்தான் அவர் பதவியேற்றுக் கொண்டார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக