வாஷிங்டன்: ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை குறைத்துக் கொண்ட நாடுகளின் பட்டியலை வெளியிட்டு பாராட்டியுள்ளது அமெரிக்கா. அதே நேரம், அந்நாட்டிடம் இருந்து தொடர்ந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளுக்கு மறைமுக எச்சரிக்கையும் விடுத்துள்ளது. அமெரிக்காவின் இச்செயலுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஈரானின் அணுசக்தி திட்டங்கள் அமைதிப் பணிகளுக்கானவை என அந்நாடு கூறி வந்தாலும், அதை அமெரிக்காவும், மேற்குலகமும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. அதனால், ஈரானை வழிக்குக் கொண்டு வர அந்நாட்டின் மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. சர்வதேச அரங்கில் அந்நாட்டை மேலும் தனிமைப்படுத்தும் முயற்சியாக, அந்நாட்டிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள், ஜூன் 28ம் தேதிக்குள் படிப்படியாக தங்கள் இறக்குமதியைக் கணிசமான அளவிற்கு குறைக்க வேண்டும் என்றும், அதைச் செய்யத் தவறும் நாடுகள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்திருந்தது. அந்த எச்சரிக்கையை உறுதி செய்யும் விதத்தில் நேற்று முன்தினம், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன், 11 நாடுகள் அடங்கிய பட்டியலை வெளியிட்டார். இந்நாடுகள், ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியை கணிசமான அளவில் குறைத்துள்ளதாகத் தெரிவித்த அவர், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆணையச் சட்டம் 2012ன்படி இந்நாடுகளின் மீது அமெரிக்கா எவ்வித பொருளாதாரத் தடையையும் விதிக்காது என உறுதியளித்தார். பிற நாடுகள் இந்நாடுகளை தங்கள் வழிகாட்டிகளாகக் கருதி இவற்றின் வழி நடக்க வேண்டும் எனவும் அறிவுரை கூறியுள்ளார்.
அவர் வெளியிட்ட பட்டியலில், பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், இத்தாலி, கிரீஸ், செக் குடியரசு, பெல்ஜியம், நெதர்லாந்து, போலந்து ஆகிய ஐரோப்பிய நாடுகளும், ஒரே ஒரு ஆசிய நாடான ஜப்பானும் இடம் பெற்றுள்ளன. இதில் ஜப்பான், ஈரான் எண்ணெய் இறக்குமதியை 15 முதல் 22 சதவீதம் வரை குறைத்துள்ளது. ஐரோப்பிய யூனியன் முற்றிலுமாக எண்ணெய் இறக்குமதியை தடை செய்து விட்டது. இப்போது இந்தியா, சீனா உள்ளிட்ட மேலும் 12 நாடுகள் ஈரானிடம் இருந்து தொடர்ந்து எண்ணெய் இறக்குமதி செய்து வருகின்றன. இவை தங்கள் இறக்குமதியை குறைக்கத் தயாராக இருந்தால் அவற்றுடன் பேச அமெரிக்கா தயார் என ஹிலாரி தெரிவித்துள்ளார். இந்தியா, சீனா மற்றும் தென் கொரியாவுடன் இதுகுறித்து அமெரிக்கா ஏற்கனவே பேசி வருகிறது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு, சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹோங் லீ நேற்று விடுத்த அறிக்கையில், "ஒரு நாடு தன்னிச்சையாக, தன் சட்டப்படி, பிற நாடுகளின் மீது தடை விதிப்பதை சீனா எப்போதும் எதிர்த்து வந்திருக்கிறது. சீனாவின் ஈரான் எண்ணெய் இறக்குமதி என்பது, மூன்றாவது ஒரு நாட்டை அல்லது சர்வதேசத்தை பாதிக்கும் அளவில் இல்லை. அது ஐ.நா., விதிமுறைகளுக்கு மாறானதுமில்லை' என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக